எங்க 3 பேருக்கும் அப்போதே கட்டம் கட்டிட்டாரு தோனி!! முடிவில் உறுதியில்லா மோசமான கேப்டன் தோனி.. தெறிக்கவிட்ட காம்பீர்

By karthikeyan VFirst Published Dec 11, 2018, 4:48 PM IST
Highlights

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட கவுதம் காம்பீர், தோனியின் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். 
 

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட கவுதம் காம்பீர், தோனியின் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். 

இந்திய அணியின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் கவுதம் காம்பீர். அணியின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்ட ஒரு நேர்மையான வீரர் காம்பீர். களத்தில் மட்டுமல்லாமல் களத்திற்கு வெளியேயும் மிகவும் நேர்மையாக தனது மனதில் பட்டதை வெளிப்படையாகவும் அதிரடியாகவும் தெரிவிக்கக்கூடியவர். அதுவே அவருக்கு எதிராக பல தருணங்களில் திரும்பியுள்ளது. 

2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் உலக கோப்பை ஆகிய இரண்டையும் வென்ற இந்திய அணியில் மிகப்பெரிய பங்காற்றியவர் கவுதம் காம்பீர். குறிப்பாக இரண்டு உலக கோப்பை தொடர்களின் இறுதி போட்டிகளிலும் அபாரமாக ஆடி இந்திய அணியை வெற்றி பெற செய்தவர். 

2013ம் ஆண்டுக்கு பிறகு காம்பீர் இந்திய அணியில் ஆடவில்லை. காம்பீரை இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டி, மீண்டும் அணிக்குள் நுழைந்துவிடாதபடி பார்த்துக்கொண்டதோடு, காம்பீரின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவைத்தது தோனிதான் என்ற ஒரு கருத்து பரவலாக ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

இந்நிலையில், அண்மையில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற காம்பீர், தோனியை தாறுமாறாக கிழித்து தொங்கவிட்டுள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் பேசியதாவது:

2012ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த சிபி தொடரில், நான், சச்சின், சேவாக் ஆகிய மூவரையும் இணைத்து அணியில் ஆடவைக்க முடியாது என்று தோனி கூறினார். தொடக்க வீரர்கள் சரியாக ஆடாததால் தோல்வியை தழுவ நேரிடுகிறது. மேலும் இவர்கள் மூவரும் ஒன்றாக ஆடுவதால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடியவில்லை. 2015ம் ஆண்டு உலக கோப்பைக்கு அணியை தயார் செய்யும் நோக்கில் இதை தெரிவிப்பதாக கூறினார். இதைக்கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 2015ம் ஆண்டு உலக கோப்பையில் நீங்கள் ஆடமாட்டீர்கள் என்று 2012ம் ஆண்டே எப்படி கூற முடியும்? ரன்களை குவிக்கும் திறமை ஒரு வீரருக்கு இருந்தால் எத்தனை வயது வரை வேண்டுமானாலும் ஆடலாம் என்பதே எனது கருத்து. 

சரி, ஒரு முடிவெடுத்தார். எங்கள் மூவரையும் இணைத்து ஆட மாட்டேன் என்று ஒரு முடிவெடுத்தர. அதில் உறுதியாக இருந்தாரா என்றால் அதுவும் இல்லை. அந்த தொடரில் தொடர் தோல்விகளை தழுவிவந்த நேரத்தில் மீண்டும் நாங்கள் மூவரும் ஒன்றாக களமிறக்கப்பட்டோம். சச்சினும் சேவாக்கும் தொடக்க வீரர்களாகவும் நான் மூன்றாவது வரிசையிலும் களமிறங்கினேன். இலங்கைக்கு எதிரான அந்த போட்டியில் அபார வெற்றி பெற்றோம். அவர் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கி, எங்கள் மூவரையும் ஒன்றாக ஆடவைத்தார். அப்படியென்றால், நாங்கள் மூவரும் ஒன்றாக ஆடக்கூடாது என்று எடுத்த முடிவு தவறானதா அல்லது எங்கள் மூவரையும் மீண்டும் ஒன்றாக களமிறக்கிய முடிவு தவறானதா என்று அதிரடியாக கேள்வி எழுப்பி தோனியை தெறிக்கவிட்டார் காம்பீர். 
 

click me!