இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா செய்த வினோத சாதனை!!

By karthikeyan VFirst Published Dec 11, 2018, 3:47 PM IST
Highlights

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றிருந்தாலும் வித்தியாசமான ஒரு சாதனையை ஆஸ்திரேலிய அணி நிகழ்த்தியுள்ளது. 
 

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றிருந்தாலும் வித்தியாசமான ஒரு சாதனையை ஆஸ்திரேலிய அணி நிகழ்த்தியுள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றியுடன் டெஸ்ட் தொடரை தொடங்குவது இதுவே முதன்முறை. 

ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித்தும் வார்னரும் இல்லாததால் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கிறது. நட்சத்திர வீரர்களான அவர்கள் இருவரும் இல்லாவிட்டாலும் கூட அந்த அணி வலிமையான அனுபவம் வாய்ந்த இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. அதுவும் அந்த அணியின் பின்வரிசை வீரர்கள் அருமையாக பேட்டிங் ஆடினர். இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும் வெறும் 31 ரன்கள் தான் வித்தியாசம் என்பது இந்திய அணிக்கு சோகமான சம்பவம்தான். 

இந்த போட்டியில் இந்திய அணிக்கு எளிதாக வெற்றியை கொடுத்து விடாமல் கடைசி வரை போராடியது ஆஸ்திரேலிய அணி. குறிப்பாக அந்த அணியின் பவுலர்கள் பாட் கம்மின்ஸ், ஸ்டார்க், நாதன் லயன் மற்றும் ஹேசில்வுட் முடிந்தவரை போராடினர். கடைசி நேரத்தில் இந்திய அணிக்கு பயத்தை காட்டி பதற்றமடைய செய்தனர். எனினும் இந்திய அணி அவர்களை வெற்றிக்கு அனுமதிக்காமல் விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் தோற்றிருந்தாலும் அந்த அணிக்கு இது ஸ்பெஷலான போட்டி. ஏனென்றால், இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு பார்ட்னர்ஷிப் கூட 50 ரன்களை எட்டவில்லை. எனினும் அந்த அணி 291 ரன்களை குவித்தது. 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்காமல் டெஸ்ட் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகமான ஸ்கோர் இதுதான். இதற்கு அடுத்த இடத்தில் வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக கடந்த 2004ம் ஆண்டு வங்கதேச அணி அடித்த 284 ரன்கள் உள்ளது. 
 

click me!