வேகப்பந்து வீச்சில் மிரட்டும் இந்தியா!! எல்லா புகழும் அவருக்கே

By karthikeyan VFirst Published Aug 27, 2018, 4:39 PM IST
Highlights

இந்திய அணியின் வேகப்பந்து யூனிட் முன்னெப்போதையும் விட தற்போது மிகவும் சிறப்பாக உள்ளது. 
 

இந்திய அணியின் வேகப்பந்து யூனிட் முன்னெப்போதையும் விட தற்போது மிகவும் சிறப்பாக உள்ளது. 

இந்திய அணி இதுவரை இல்லாத அளவிற்கு மிகச்சிறந்த வேகப்பந்து யூனிட்டை பெற்றுள்ளது. இந்திய அணி பொதுவாக பவுலிங்கை விட பேட்டிங்கில் சிறந்து விளங்கும். ஒரு குறிப்பிட்ட காலம்வரை இந்திய அணியின் வெற்றிக்கு பேட்டிங்தான் பெரும்பாலும் முக்கிய காரணமாக திகழ்ந்திருக்கிறது. ஒருசில போட்டிகளில் தான் பவுலிங்கால் வெற்றி பெற்றிருக்கும். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு, முன்பெல்லாம் எதிரணியை மிரட்டும் வகையில் இருக்காது. 

ஆனால் தற்போதைய பவுலிங் யூனிட் உலகின் எந்த அணியையும் மிரட்டும் வகையில் உள்ளது. மிரட்டியும் வருகிறது. புவனேஷ்வர் குமார், பும்ரா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகிய ஒவ்வொருவருமே ஒவ்வொரு வகையில் சிறந்தவர்கள். புவனேஷ்வர் குமார் நன்றாக ஸ்விங் செய்வார். உமேஷ் யாதவ் வேகமாக வீசுவார். பும்ரா டெத் ஓவர்களை சிறப்பாக வீசுவார். இஷாந்த் சர்மா உயரமானவர் என்பதால் நல்ல லெந்த்திலும் பவுன்சரும் நன்றாக வீசுவார். இவ்வாறு ஒவ்வொரு பவுலரும் ஒவ்வொரு தனித்துவத்தை கொண்டவர்கள்.

இவர்களில் புவனேஷ்வர் குமாரும் பும்ராவும் ஒருநாள் போட்டிகளில் நிரந்தரமாக ஆடிவருகின்றனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரை சேர்ப்பது, யாரை விடுப்பது என்பது தெரியாத அளவிற்கு அனைவரும் சிறப்பாக வீசுகின்றனர். இந்திய அணியின் தற்போதைய வேகப்பந்து வீச்சு கலவை அருமையாக இருக்கிறது. உலகின் அனைத்து அணிகளையும் மிரட்டுகிறது. 

இதுவரை இல்லாத அளவிற்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் யூனிட் சிறப்பாக இருப்பதாக சச்சின் டெண்டுல்கரே ஏற்கனவே தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்திய பவுலர்கள் சிறப்பாக வீசிவருகின்றனர். மூன்றாவது டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டும் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினர். 

வேகப்பந்து வீச்சில் பின் தங்கியே இருந்த இந்திய அணியின் வேகப்பந்து யூனிட் சிறந்து விளங்க என்ன காரணம்? என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நிக் காம்ப்டன் விளக்கியுள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நிக் காம்ப்டன், இந்திய அணியின் பவுலிங் யூனிட் திடீரென சிறந்து விளங்கிவிடவில்லை. இந்திய அணியின் பவுலிங் யூனிட்டை மெருகேற்றிய பெருமை அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளரும் ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரருமான ஃப்ளெட்சரையே சாரும்.

கொஞ்சம் கொஞ்சமாக இந்திய அணியின் பவுலர்களை மெருகேற்றியுள்ளார் ஃபிளெட்சர். அதன் விளைவுதான் இன்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறந்து விளங்குகின்றனர். இப்போதைய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் பலரும் ஃபிளெட்சர் பயிற்சியாளராக இருந்தபோது ஆடியவர்கள். ஃபிளெட்சரின் பயிற்சியால்தான் அவர்கள் இப்போது மிரட்டலாக வீசுகிறார்கள்.

இந்திய பவுலர்கள் மட்டுமல்ல. இங்கிலாந்து அணியின் அனுபவ பவுலர்களான ஆண்டர்சனும் பிராடும் சிறந்த டெஸ்ட் பவுலர்களாக வலம்வருவதற்கு கூட ஃபிளெட்சர் தான் காரணம். அவர்களது டெஸ்ட் கிரிக்கெட் வெற்றிகரமானதாக அமையவும் ஃபிளெட்சர் முக்கிய காரணம். ஏனென்றால் அவர்களும் ஃபிளெட்சரிடம் பயிற்சி பெற்றுள்ளனர் என்றார் நிக் காம்ப்டன்.

ஃபிளெட்சர், கேரி கிறிஸ்டனுக்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார். 
 

click me!