
ஆஸ்திரேலிய அணியின் பார்வையில் கோலிதான் முதல் எதிரி என்று மைக் ஹசி தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் 23-ஆம் தேதி புணேவில் தொடங்குகிறது.
இந்த நிலையில் மைக் ஹசி கூறியதாவது:
“ஆஸ்திரேலிய அணியின் பார்வையில் கோலிதான் முதல் எதிரி. அவரை விரைவாக வீழ்த்த முயற்சிக்க வேண்டும். அவரை வம்பு சண்டைக்கு இழுக்கக் கூடாது. அவரை சீண்டினால், அதிரடியாக ரன் குவித்துவிடுவார். அவர் எப்போதுமே களத்தில் வாக்குவாதம் செய்வதையும், எதிரணியின் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்வதையும் விரும்பக்கூடியவர். எனவே அவரை சீண்டுவது நமக்கு பாதகமாகிவிடும்.
கோலியை வீழ்த்துவதற்கு ஆஸ்திரேலிய வீரர்கள் சரியான திட்டத்தோடு களமிறங்க வேண்டும். அதை முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுத்த முயற்சிக்க வேண்டும். அதை செய்யாமல் அவரை வாய்ச் சண்டைக்கு இழுத்தால் அவர் பதிலடி கொடுத்துவிடுவார். தேவையில்லாமல் அவரை சீண்டும்போது நம்முடைய கவனம் திசை திரும்பக்கூடும்.
இந்தத் தொடரைப் பொறுத்தவரையில் வெற்றிக்கான வியூகத்தை சரியாக செயல்படுத்தும் அணியே வெற்றி பெறும். வம்புச் சண்டையை இழுப்பதன் மூலமோ, ஆக்ரோஷமாக ஆடுவதன் மூலமோ வெற்றி பெற முடியாது.
தற்போதைய நிலையில் கோலி மிகுந்த நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார். இந்திய ஆடுகளங்களின் தன்மை குறித்து அவருக்கு நன்றாகத் தெரியும். பொதுவாகவே அவர் சிறப்பாக ஆடிவிட்டால் அந்தப் போட்டியில் இந்தியா வென்றுவிடும்
இதேபோல் ஆஸ்திரேலியாவில் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் மிக முக்கியமான பேட்ஸ்மேன்கள். இவர்கள் ரன் குவித்துவிட்டால் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுவிடும். அவர்கள் விரைவாக வீழ்ந்துவிட்டால், எஞ்சிய பேட்ஸ்மேன்கள் கடுமையான நெருக்கடிக்கு தள்ளப்படுவார்கள்.
ஸ்டீவன் ஸ்மித்தை விரைவாக வீழ்த்துவதற்கு இந்திய அணியினர் முயற்சிப்பார்கள் என்றார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.