
இந்திய அணி மூன்றுவிதமான போட்டிகளிலும் வலுவான அணியாக திகழ்ந்தாலும் டி 20 போட்டிகளை பொறுத்தமட்டில் ஆஸ்திரேலிய அணி வலுவாக உள்ளதாகவும் தொடரை கண்டிப்பாக வெல்லும் என்றும் அந்த அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடக்கிறது. முதல் போட்டி பிரிஸ்பேனில் இன்று மதியம் 1.20 மணிக்கு தொடங்குகிறது.
ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறது. எனவே அணி மறுகட்டமைப்பில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இந்தியவை வீழ்த்தி மீண்டெழும் முனைப்பில் உள்ளது. அதேநேரத்தில் அனைத்துவிதமான போட்டிகளிலும் மிரட்டலாக ஆடிவரும் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மாஸ் காட்டும் முனைப்பில் உள்ளது.
இன்று டி20 போட்டி தொடங்க உள்ள நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் தோல்வியடைந்தாலும் டி20 போட்டிகளில் நாங்கள் சிறந்த அணி. ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்தில் நடந்த முத்தரப்பு தொடர்களில் வெற்றி பெற்றுள்ளோம். இந்திய அணி மூன்றுவிதமான போட்டிகளிலும் நீண்டகாலமாகவே சிறப்பாக ஆடிவருகிறது. அதனால் இந்தியாவுடன் எங்கள் அணி முழு பலத்துடனும் ஆக்ரோஷத்துடனுமே ஆடும். டி20 கிரிக்கெட்டில் நாங்கள் வலுவான அணி என்பதால் இந்திய அணியால் எங்களால் அவ்வளவு எளிதில் வீழ்த்த முடியாது என்று ஃபின்ச் அதிரடியாக பேசினார்.