
கடந்த 40 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய ஓபனில் ஆடவர் பிரிவு அரையிறுதிக்கு முன்னேறிய மூத்த வீரர் என்ற பெருமையை ஃபெடரர் பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் சுவிட்ஸர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர், சக நாட்டு வீரர் ஸ்டான் வாவ்ரிங்காவுடன் மோதுகிறார்.
முன்னதாக நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில், ஜெர்மனியின் மிஸ்கா ஸ்வெரெவுடன் மோதினார் ஃபெடரர். இருவருக்கும் இடையே விறுவிறுப்பாக 92 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் ஃபெடரர் 6-1, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
வெற்றிக்குப் பிறகு பேசிய ஃபெடரர், "ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் வாவ்ரிங்கா அரையிறுதி வரை முன்னேறியது மகிழ்ச்சியே. ஆனால், இதுவே அவருக்குப் போதுமானது. இதற்கு மேல் அவர் போட்டியில் நீடிக்கத் தேவையில்லை' என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸின் ஜோ வில்ஃப்ரைடு சோங்காவை எதிர்கொண்ட வாவ்ரிங்கா, 7-6(2), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று 3-ஆவது முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறினார்.
முன்னதாக, இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது.
ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம், கடந்த 40 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய ஓபனில் ஆடவர் பிரிவு அரையிறுதிக்கு முன்னேறிய மூத்த வீரர் என்ற பெருமையை ஃபெடரர் (35) சொந்தமாக்கியுள்ளார்.
வெற்றிக்குப் பிறகு பேசிய வாவ்ரிங்கா, "சோங்கா பலம் வாய்ந்த வீரர் என்பதால், அவருக்கு எதிராக விளையாடுவது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. அரையிறுதியில் ஃபெடரருக்கு எதிராக விளையாட உள்ளேன். நான் அதற்குத் தகுதியானவன்.
அவருக்கு எதிரான ஆட்டத்தில் எனக்கு ஆதரவான ரசிகர்கள் கிடைப்பது கடினம் தான். இருப்பினும், எனக்கென சிலர் ஆதரவு தெரிவிப்பார்கள் என நம்புகிறேன்' என்றுத் தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.