
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி இடியாய் இடித்து 93 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 311 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் அலாஸ்டர் குக், ஹசீப் ஹமீது ஆகியோர் களமிறங்கினர். இதில், 47 பந்துகளை சந்தித்த அலாஸ்டர் குக் 2 பவுண்டரிகளுடன் 21 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர், ஜடேஜா பந்துவீச்சில் எல்பிடபிள்யு முறையில் அவுட் ஆனார்.
இதையடுத்து ஜோ ரூட் களம் புகுந்தார். மறுமுனையில் ஹமீது, 82 பந்துகளுக்கு 6 பவுண்டரிகளுடன் 31 ஓட்டங்கள் எடுத்தார். அணியின் ஸ்கோர் 76-ஆக இருந்தபோது, அவரை எல்பிடபிள்யு முறையில் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார் அஸ்வின்.
தொடர்ந்து வந்த பென் டக்கெட், 17 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 13 ஓட்டங்கள் எடுத்து வந்த வேகத்திலேயே திரும்பினார். மறுமுனையில் ஜோ ரூட் 72 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
டக்கெட்டை தொடர்ந்து களத்துக்கு வந்த மொயீன் அலி, ஜோ ரூட்டுடன் இணை சேர்ந்தார். விக்கெட் சரிவை தடுத்த இந்த பார்ட்னர்ஷிப், 4-ஆவது விக்கெட்டுக்கு 179 ஓட்டங்கள் சேர்த்தது.
மொயீன் அலி 99 பந்துகளில் அரைசதம் கடக்க, ஜோ ரூட் 154 பந்துகளில் சதமடித்தார். இது, டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட்டின் 11-ஆவது சதமாகும். அணியின் ஸ்கோர் 281-ஆக இருந்தபோது, இந்த இணை பிரிந்தது. ஜோ ரூட் 180 பந்துகளுக்கு 11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 124 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, உமேஷ் யாதவின் பந்துவீச்சை அவரிடமே கேட்ச் கொடுத்தார். அவரைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் களத்துக்கு வந்தார்.
முதல்நாளான புதன்கிழமை ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 93 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 311 ஓட்டங்கள் எடுத்தது. மொயீன் அலி 99, பென் ஸ்டோக்ஸ் 19 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.
இந்தியத் தரப்பில், அஸ்வின் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.