அஷ்வினின் அருமை உங்களுக்கு இனிமேல்தான் தெரியும்!! முன்னாள் ஸ்பின்னர் அதிரடி

By karthikeyan VFirst Published Aug 21, 2018, 1:58 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அஷ்வினின் முக்கியத்துவம் தெரியும் என்று முன்னாள் ஸ்பின் பவுலர் திலீப் தோஷி கருத்து தெரிவித்துள்ளார்.
 

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அஷ்வினின் முக்கியத்துவம் தெரியும் என்று முன்னாள் ஸ்பின் பவுலர் திலீப் தோஷி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் நிரந்தர ஸ்பின்னராக அஷ்வின் திகழ்கிறார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டாலும் அவரது அனுபவ பந்துவீச்சு, டெஸ்ட் போட்டிக்கு தேவை என்பதால், டெஸ்ட் அணியின் நட்சத்திர பவுலராக திகழ்கிறார். 

ஸ்பின் பவுலிங்கில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் கைகொடுப்பவர் அஷ்வின். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி பவுலிங்கில் அசத்திய அஷ்வின், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும் பேட்டிங்கில் அசத்தினார். 

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியை நோக்கி செல்கிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் அஷ்வின் ஒரு ஓவர் மட்டுமே வீசினார். இங்கிலாந்துக்கு 521 ரன்களை இந்தியா இலக்காக நிர்ணயித்துள்ளது. அந்த அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் அஷ்வின் முக்கிய பங்காற்றுவார் என இந்திய அணியின் முன்னாள் ஸ்பின் பவுலர் திலீப் தோஷி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திலீப் தோஷி, அஷ்வின் முன்பைவிட தற்போது நன்கு முதிர்ச்சியடைந்துள்ளார். சிறந்த அனுபவத்தை பெற்றுள்ள அஷ்வினின் தற்போதைய பந்துவீச்சு மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக நடந்துவரும் மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் அஷ்வினின் முக்கியத்துவம் தெரியவரும். குல்தீப் நல்ல ஸ்பின்னர் என்றாலும் டெஸ்ட் போட்டியில் ஆடுமளவிற்கு இன்னும் அனுபவம் பெறவில்லை. 

குல்தீப் பந்தை மெதுவாக வீசுகிறார். அது டெஸ்ட் போட்டிக்கு சரியாக வராது. ஆனால் ஜடேஜா சிறப்பாக பந்துவீசக்கூடியவர். அவர் டெஸ்ட் போட்டியில் ஆடுவதை பார்க்க ஆவலாக உள்ளது என்றார். 
 

click me!