தவான் அடித்தது சாதாரண சதமல்ல.. சாதனை சதம்!!

First Published Jun 14, 2018, 3:47 PM IST
Highlights
dhawan scored a record century against afghanistan


டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளைக்கு முன்பாக சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை தவான் பெற்றுள்ளார். 

அண்மையில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த அணியான இந்தியாவுடன் முதல் டெஸ்ட் போட்டியை ஆடிவருகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஷிகர் தவானும் முரளி விஜயும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ரஷீத் கான், முஜீபுர் ரஹ்மான் ஆகிய ஸ்பின் பவுலர்களை நம்பி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியின் நம்பிக்கையை சிதைத்தார் ஷிகர் தவான். 

அதிரடியாக ஆடிய ஷிகர் தவான், உணவு இடைவேளைக்கு முன்னதாகவே சதமடித்தார். 87 பந்துகளில் தவான் சதமடித்தார். இதன்மூலம் டெஸ்ட் போட்டியின் முதல்நாளில் உணவு இடைவேளைக்கு முன்பாக சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை தவான் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக டிரம்பர், மெகார்ட்னி, டான் பிராட்மேன், மாஜித் கான், டேவிட் வார்னர் ஆகியோர் மட்டும்தான் முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன்பாக சதமடித்துள்ளனர். 

இந்த வரிசையில் தற்போது தவானும் இணைந்துள்ளார். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய வீரர் தவான் தான். இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில், முதல் நாள் உணவு இடைவேளையின் போது சேவாக் 99 ரன்கள் எடுத்திருந்தார். அது ஒரு சாதனை என்பது தெரியாமல், 99 ரன்களுடன் சேவாக், உணவு இடைவேளைக்கு சென்றார். தெரிந்திருந்தால், சேவாக் சதமடித்திருந்திருப்பார். 

முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன்பாக சதமடித்தது மட்டுமல்லாமல், மூன்றாவது முறையாக ஒரே செசனில் சதமடித்துள்ளார். பிராட்மேன் மட்டுமே 6 முறை ஒரு செசனில் சதமடித்துள்ளார். 
 

click me!