
கல்லூரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான ஆடவர் வலைகோல் பந்தாட்டப் போட்டியில் தருமபுரி மாவட்ட டான் போஸ்கோ கல்லூரி அணி முதலிடம் பெற்று அசத்தியது.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி மற்றும் மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் இந்தப் போட்டி நடைபெற்றது.
திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 2 இடங்களில் இப்போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள கலை - அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி அணிகள் பங்கேற்றன. 'நாக் அவுட்' முறையில் போட்டி நடைபெற்றது.
முதல் அரையிறுதியில் தருமபுரி டான் போஸ்கோ கல்லூரி அணி 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை நாசரேத் கல்லூரி அணியைத் தோற்கடித்தது. மற்றொரு அரையிறுதியில் சென்னை செயின்ட் ஜோசப் கல்லூரி அணி டைபிரேக்கர் முறையில் 5-4 என்ற கோல் கணக்கில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணியை வீழ்த்தியது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில், தருமபுரி டான் போஸ்கோ கல்லூரி அணியும், சென்னை செயின்ட் ஜோசப் கல்லூரி அணியும் மோதின. இதில் தருமபுரி டான் போஸ்கோ அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.
சென்னை செயின்ட் ஜோசப் கல்லூரி அணி 2-ஆம் இடம் பிடித்தது. திருச்சி ஜமால் முகமது கல்லூரி மூன்றாம் இடத்தையும், சென்னை நாசரேத் கல்லூரி அணி 4-ஆம் இடத்தையும் பிடித்தன.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.