
ஐபிஎல் தொடரின் 26வது போட்டி டெல்லியில் நடைபெற்றது. டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று கேப்டன் பொறுப்பிலிருந்து கம்பீர் விலகியதை அடுத்து நேற்று ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக பொறுப்பு வகித்தார்.
தொடர் தோல்விகளிலிருந்து மீளும் முனைப்பில் இரு அணிகளும் களம் கண்டன. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.
இந்த போட்டியில் கவுதம் கம்பீர் விளையாடவில்லை. முன்ரோவும் பிரித்வி ஷாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவருமே சிறப்பாக ஆடினர். முன்ரோ 33 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷ்ரேயாஸ் ஐயர் பிரித்வியுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடி அரைசதம் கடந்த பிரித்வி ஷா, 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ரிஷப் பண்ட் முதல் பந்திலேயே அவுட்டானார். கேப்டன் என்ற கூடுதல் பொறுப்புடன் ஆடிய ஷ்ரேயாஸ், அந்த பொறுப்பை உணர்ந்து சிறப்பாகவே ஆடினார். அரைசதம் கடந்தார். கடைசி ஓவரில், ஷ்ரேயாஸ் ருத்ர தாண்டவம் ஆடினார். மாவி வீசிய கடைசி ஓவரில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாசினார். கடைசி ஓவரில் மட்டும் 1 வைடு உட்பட 29 ரன்கள் டெல்லி அணிக்கு கிடைத்தன.
ஷ்ரேயாஸ் ஐயரின் மிரட்டலான பேட்டிங்கால், டெல்லி அணி எதிர்பார்த்ததை விட கூடுதல் ரன்கள் அந்த அணிக்கு கிடைத்தன. 20 ஓவரின் முடிவில் 219 ரன்கள் குவித்தது.
220 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் சுனில் நரைன் அதிரடியாக ஆடி டெல்லி அணியை மிரட்ட, மறுபுறம் கிறிஸ் லின் வெறும் 5 ரன்களுக்கு வெளியேறினார். அதிரடியாக ஆடிய சுனில் நரைன், 9 பந்துகளில் 26 ரன்கள் அடித்து அவுட்டானார்.
அதன்பிறகு களமிறங்கிய உத்தப்பா, ராணா, தினேஷ் கார்த்திக் என யாருமே சரியாக ஆடவில்லை. ஷுப்மன் கில் ரசல் ஜோடி நிதானமாகவும் அதிரடியாகவும் ஆடி, அந்த அணிக்கு நம்பிக்கை அளித்தது. ஆனாலும் இலக்கு அதிகம் என்பதால் அந்த இணையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கில் ரன் அவுட்டானார்.
ரசலும் 44 ரன்களுக்கு அவுட்டானார். இறுதியில் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி, 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து டெல்லி அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தொடர் தோல்வியிலிருந்து மீண்ட டெல்லி அணி, ஷ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சியின் கீழ் புதிய உத்வேகத்தை பெற்றுள்ளது. ஆட்டநாயகனாக ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.