
இந்திய "ஏ' அணிக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட் ஆட்டத்தில் வங்கதேச அணி 67 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ஓட்டங்கள் சேர்த்து டிக்ளேர் செய்ததைத் தொடர்ந்து ஆட்டத்தைத் தொடங்கியது இந்தியா.
பின்னர் பேட் செய்த இந்திய "ஏ' அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 21 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 91 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் இம்ருள் கயெஸ் 4 ஓட்டங்களில் வெளியேற, மற்றொரு தொடக்க வீரரான தமிம் இக்பால் 13 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் இளம் வேகப்பந்து வீச்சாளரான அனிகெட் செளத்ரி பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.
இதன்பிறகு மோமினுல் ஹக் 5 ஓட்டங்களில் நடையைக் கட்ட, செளம்ய சர்க்கார் 73 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் சேர்த்து வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து மகமதுல்லா 23 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, 113 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது வங்கதேசம்.
ஆனால் 6-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த சபீர் ரஹ்மான்-கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் ஜோடி 71 ஓட்டங்கள் சேர்க்க, மோசமான நிலையில் இருந்து மீண்டது வங்கதேசம். சபீர் ரஹ்மான் 33 ஓட்டங்களில் வெளியேறினார்.
61-ஆவது ஓவரை வீசிய செளத்ரி அடுத்தடுத்த பந்துகளில் முஷ்பிகுர் ரஹிம் (58), மெஹதி ஹசன் மிராஸ் (0) ஆகியோரை வீழ்த்தினார்.
அந்த அணி 67 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
லிட்டன் தாஸ் 23, தைஜுல் இஸ்லாம் 4 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.
இந்திய "ஏ' அணித் தரப்பில் செளத்ரி 12 ஓவர்களில் 26 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய இந்திய அணியில் கேப்டன் அபிநவ் முகுந்த் - பி.கே.பன்சால் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.3 ஓவர்களில் 41 ஓட்டங்கள் சேர்த்தது.
முகுந்த் 16 ஓட்டங்களில் அவுட்டாக, பி.கே.பன்சாலுடன் இணைந்தார் ஷ்ரேயஸ் ஐயர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய "ஏ' அணி 21 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 91 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
பி.கே.பன்சால் 40, ஷ்ரேயஸ் ஐயர் 29 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.
வங்கதேசம் தரப்பில் சுபாஷிஸ் ராய் ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.