
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் பிளே ஆஃப் சுற்றில் தொடர்ந்து 4-வது வருடமும் இந்தியா 2-3 என்ற கணக்கில் கனடாவிடம் தோல்வி அடைந்தது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் பிளே ஆஃப் சுற்று கனடாவின் எட்மான்டன் நகரில் நடைபெற்றது.
இந்தப் போட்டியின் முதல் நாளில் இந்தியாவின் ராம்குமார் வெற்றிப் பெற்றார். யூகி பாம்ப்ரி தோல்வி கண்டார். 2-வது நாளில் நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - பூரவ் ராஜா இணை கனடாவின் டேனியல் நெஸ்டர்-
வசேக் போஸ்பிஸில் இணையிடம் தோல்வி கண்டது. இதனால் 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கியது.
இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாற்று ஒற்றையர் ஆட்டங்கள் இரண்டிலும் வென்றால் மட்டுமே உலக குரூப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் களம் கண்டது இந்தியா.
முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் ராம்குமார், கனடாவின் டெனிஸ் ஷபோவெலாவிடம் மோதி 3-6, 6-7 (1), 3-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தார். அப்போதே உலக குரூப் சுற்றுக்கு முன்னேறும் இந்தியாவின் கனவும் தகர்ந்தது.
பின்னர் நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் யூகி பாம்ப்ரி, கனடாவின் பிரேடென் ஸ்னரை 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். ஆனால், அந்த வெற்றி ஆறுதல் வெற்றியாக மட்டுமே இருந்தது.
டேவிஸ் கோப்பை போட்டியில் தொடர்ந்து 4-வது ஆண்டாக உலக குரூப் பிளே ஆஃப் சுற்றில் தோல்வி அடைந்தது இந்தியா.
இதற்கு முந்தைய ஆண்டுகளில் செர்பியா, செக்.குடியரசு, ஸ்பெயின் அணிகளிடம் இந்தியா தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.