ஒரு போட்டியில ஜெயிச்சதுமே ரவி சாஸ்திரி வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டாரு

By karthikeyan VFirst Published Aug 23, 2018, 8:19 AM IST
Highlights

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ள கருத்து, தன்னடக்கம் என்பதே என்னவென்று தெரியாத வகையில் உள்ளது. 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவிய இந்திய அணி, மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. 

முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியது. இரண்டாவது போட்டியில் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதேபோலவே முதல் போட்டியில் ராகுல், முரளி விஜய், தவான் ஆகிய மூவருமே சரியாக ஆடாத நிலையில், எதனடிப்படையில் தவான் மட்டும் நீக்கப்பட்டார் என்ற கேள்வியும் எழுந்தது. 

அணி தேர்வு குறித்தும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் கோலி மீதும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ரவி சாஸ்திரியும் கோலியும் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. அணியின் நலன் கருதி மாற்றங்களை செய்தாலும் முன்னாள் ஜாம்பவான்களின் கருத்தையும் காது கொடுத்து கேட்க வேண்டியது அவசியம் என்ற குரல்கள் எழுந்தன. 

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அடைந்த தோல்வி இந்திய அணியை உலுக்கியது. அதன்பிறகு ரவி சாஸ்திரி மற்றும் கோலி ஆகிய இருவருமே அணி தேர்வில் தவறு நடந்ததை ஒப்புக்கொண்டனர். அடுத்தடுத்த போட்டிகளிலும் தோற்றால் இருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை குறைக்க பிசிசிஐ பரிசீலித்துவருவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கிய இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. 

அதனால் இன்னும் இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு உயிர்ப்புடன் தான் உள்ளது. மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றபிறகு பேசிய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, விராட் கோலி குறித்து பேசுகையில், கோலிக்கு ஆட்டத்தின் மீது உள்ள பற்றும் காதலும் ரொம்ப அதிகம். அவரை போன்ற ஒரு வீரரை நான் இதுவரை பார்த்ததில்லை. அவர் இந்த போட்டியில் ஆடிய இரண்டு இன்னிங்ஸ்களும் அவரால் மறக்க முடியாது என்பதை நான் உறுதியாக கூறுகிறேன் என்றார்.

மேலும் பேசிய அவர், எங்களால் உலகின் எந்த அணியையும் அவர்களது இடத்தில் வைத்தே வீழ்த்த முடியும். அதேநேரத்தில் எந்த அணியும் இந்தியாவிற்கு வந்து எங்கள் அணியை வீழ்த்த முடியாது. நாங்கள் இந்தியாவிற்கு வெளியே வெளிநாடுகளில் சென்று வெற்றிகளை குவிக்க விரும்புகிறோம். எங்கள் அணி உலகின் மிகச்சிறந்த டிராவலிங் அணி(எதிரணியை அந்த நாட்டில் வைத்து வீழ்த்துவதை குறிப்பிடுகிறார்) என தெரிவித்தார். 
 

click me!