
சென்னை அணி வீரர்களின் நலன் கருதி அணி நிர்வாகம் பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளதாக தெரிகிறது.
ஐபிஎல் 11வது சீசன் நடந்துவருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அணி களமிறங்கியுள்ள போதும், அதை பெரிதாக கொண்டாடும் மனநிலையில், தமிழக ரசிகர்கள் இல்லை. முதல் போட்டியில் மும்பையை வீழ்த்திய சென்னை அணி, இன்று கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது.
இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழர்கள் ஒன்றுகூடி போராடிவரும் நிலையில், ஐபிஎல் கொண்டாட்டம் தேவையில்லை. சென்னையில் இந்த போட்டியை நடத்தக்கூடாது என்ற எதிர்ப்புக்குரல் தமிழகத்தில் வலுத்துள்ளது.
மீறி நடந்தால், மைதானம் முற்றுகையிடப்படும் என வேல்முருகன் எச்சரிக்கை விடுத்தார். அதனால் மைதானத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், வீரர்களுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
வீரர்கள் வெளியே செல்லும்போது அவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என வேல்முருகன் தெரிவித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் வீரர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பைக்கில் சுற்றக் கூடாது, வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும், அனுமதிக்கப்பட்ட வாகனத்தை பயன்படுத்த வேண்டும் ஆகிய கட்டுப்பாடுகளை வீரர்களுக்கு சென்னை அணி நிர்வாகம் விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக தோனிக்கு தனியாக பைக்கில் வெளியே சுற்ற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. பைக் பிரியரான தோனி, பல உயர் ரக பைக்குகளை வாங்கிவைத்துள்ளார். சென்னையில் தங்கியிருக்கும் காலத்தில் தனியாக வெளியே செல்வதற்காக பைக் வைத்திருக்கிறார். பாதுகாப்பு கருதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், தோனி பைக்கில் சென்னையை சுற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.