காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஹீனா சித்து தங்கம் வென்று அசத்தல்...

First Published Apr 11, 2018, 10:17 AM IST
Highlights
Commonwealth Games shooters win over India


காமன்வெல்த் போட்டியின் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவின் ஹீனா சித்து தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். 

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். 

இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், ஹாக்கி, குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் தங்கம் வென்று இந்திய வீரர்கள் சாதனை புரிந்து வருகின்றனர்.

பதக்கப் பட்டியலில் ஏற்கெனவே இந்தியா 3-வது இடத்தில் உள்ள நிலையில் போட்டியின் 6-வது நாளான நேற்று துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஹீனா சித்து தங்கப் பதக்கம் வென்றார்.  மகளிர் 25 மீ பிஸ்டல் பிரிவில் அவர் பழைய காமன்வெல்த் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார். 

10 மீ பிஸ்டல் பிரிவில் சித்து தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 16 வயதே ஆன மானு பாக்கர் தங்கம் வென்றார். ஹீனா வெள்ளியோடு திருப்தி பட வேண்டியதாயிற்று. இந்நிலையில் 25 மீ பிஸ்டல் பிரிவில் சித்து தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கடந்த காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ககன் நரங் 50 மீ ரைஃபிள் பிரிவில் 7-வது இடத்தையே பெற்றார். மேலும் முதன்முறையாக இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு வீரரான செயின்சிங் 4-வது இடத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

tags
click me!