எல்லாருமே முழு தொடரிலும் ஆடலாம்.. கோலியின் கோரிக்கை நிராகரிப்பு!! பிசிசிஐ அதிரடி

By karthikeyan VFirst Published Dec 20, 2018, 2:11 PM IST
Highlights

உலக கோப்பையில் ஆடும் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அடுத்த ஐபிஎல் சீசனிலிருந்து முழுவிலக்கு அளிக்க வேண்டுமென இந்திய அணியின் கேப்டன் கோலி பிசிசிஐ-யின் நிர்வாகக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

உலக கோப்பை அடுத்த ஆண்டு மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. இதற்கிடையே மார்ச் 29ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடர் மே 19ம் தேதி முடிவடைகிறது. ஐபிஎல் முடிந்த 11 நாட்களில் உலக கோப்பை தொடங்குகிறது. ஐபிஎல் தொடர் முடிந்து உலக கோப்பையில் ஆடுவதற்கு குறைந்தது 15 நாட்கள் இடைவெளி தேவை என்று பிசிசிஐ வைத்த கோரிக்கையை ஏற்று, இந்திய அணிக்கு முதல் போட்டி ஜூன் 5ம் தேதிக்கு அட்டவணையிடப்பட்டுள்ளது. 

இதற்கிடையே உலக கோப்பையில் ஆடும் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அடுத்த ஐபிஎல் சீசனிலிருந்து முழுவிலக்கு அளிக்க வேண்டுமென இந்திய அணியின் கேப்டன் கோலி பிசிசிஐ-யின் நிர்வாகக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஐபிஎல்லில் வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைந்து, அதனால் உலக கோப்பையில் ஆட முடியாத சூழல் உருவாகிவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக அவர்களுக்கு ஐபிஎல் சீசன் முழுவதும் விலக்கு அளிக்க வேண்டுமென கோலி கோரிக்கை விடுத்திருந்தார். 

ஆனால் ரோஹித் சர்மா, கோலியின் கருத்திலிருந்து முரண்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கும் இறுதி போட்டிக்கும் தகுதி பெறும் நிலையில், அந்த அணியின் நட்சத்திர பவுலரான பும்ரா மும்பை அணியில் ஆடுவார் என்றும் அவருக்கு ஓய்வளிக்க மாட்டோம் என்றும் ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார். 

கோலியின் கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக்கும் கோலியின் கருத்தை ஏற்க மறுத்தார். அதுகுறித்து பேசிய சேவாக், 2 மாதம் வீரர்கள் ஆடாமல் வீட்டில் உட்கார்ந்து என்ன செய்யப்போகிறார்கள்? வீரர்கள் காயமடைந்திருந்தாலோ அல்லது முழு உடற்தகுதியில் இல்லாமல் இருந்தாலோ இதுபோன்ற கோரிக்கையை வைக்கலாமே தவிர வீரர்கள் முழு உடற்தகுதியுடன் இருக்கும்போது போட்டிகளில் ஆடலாம் என்று சேவாக் தெரிவித்திருந்தார். 

மேலும், வேகப்பந்து வீச்சாளர்கள் ஐபிஎல்லில் அனைத்து போட்டிகளிலும் ஆடப்போவதில்லை. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் அணிகளிலும் உடற்தகுதி நிபுணர்கள் இருக்கிறார்கள் எனும்போது அவர்கள் ஐபிஎல்லில் ஆடுவதில் எந்த பிரச்னையும் இல்லை என்பதே பிசிசிஐ-யின் கருத்தாக இருந்ததாகக் கூறப்பட்டது. 

இந்நிலையில், இந்திய அணியின் அனைத்து வீரர்களும் ஐபிஎல் தொடர் முழுவதும் ஆடுவார்கள் என்று பிசிசிஐ நிர்வாகக்குழு உறுப்பினர் டயானா எடுல்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதனால் இதில் இருந்த குழப்பம் விலகியது. அனைத்து இந்திய வீரர்களுமே ஐபிஎல் தொடர் முழுவதுமே ஆட உள்ளனர். 
 

click me!