
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தன்னை தக்கவைப்பதாக கூறி ஏமாற்றி விட்டதாக கிறிஸ் கெய்ல் வேதனை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 11வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த ஐபிஎல் தொடருக்கான ஏலத்தின்போது, அதிரடி வீரர் கிறிஸ் கெய்லை எந்த அணியும் எடுக்கவில்லை. ஐபிஎல் தொடரிலும் 20 ஓவர் கிரிக்கெட்டிலும் பல சாதனைகளை தன்வசம் வைத்துள்ள கெய்லை, ஏலத்தில் எந்த அணியும் எடுக்காதது பெரும் ஆச்சரியமாகவே இருந்தது.
முதல் இரண்டு ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை. மூன்றாவது ஏலத்தில் சேவாக் ஆலோசகராக உள்ள பஞ்சாப் அணி, அடிப்படை விலையான 2 கோடிக்கு கெய்லை எடுத்தது. கிறிஸ் கெய்ல், கடந்த சில ஐபிஎல் தொடர்களில் பெங்களூரு அணிக்காக ஆடினார். பெங்களூரு அணிக்காக சிறப்பாகவே விளையாடினார். எனினும் அவரை அடிப்படை விலையான 2 கோடிக்குகூட அந்த அணி தக்கவைக்கவில்லை.
இந்நிலையில், தற்போது பஞ்சாப் அணிக்காக ஆடிவரும் கிறிஸ் கெய்ல், ஏலத்தில் புறக்கணிக்கப்பட்ட கோபத்தை எல்லாம் சேர்த்து பேட்டிங்கில் காட்டி வருகிறார். 4 போட்டிகளில் 252 ரன்கள் குவித்துள்ளார். ஒரு சதம் மற்றும் 2 அரைசதங்களும் இதில் அடங்கும்.
பஞ்சாப் அணிக்காக சிறப்பாக ஆடிவரும் கெய்ல், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஆர்சிபி அணி தன்னை புறக்கணித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஆர்சிபி அணியின் மிகப்பெரிய நட்சத்திரம் நான் தான். என்னைத் தேர்வு செய்வது குறித்து அவர்கள் பேசினார்கள். ஆனால் அதைச் செய்யாமல் விட்டது வருத்தமான ஒன்று.
என்னை அணியில் சேர்க்க விரும்பியவர்கள், என்னைத் தக்கவைத்துக் கொள்வதாகவும் கூறினார்கள். ஆனால் அதன்பிறகு அவர்கள் என்னை அழைக்கவே இல்லை. அதிலிருந்து அவர்களுக்கு நான் தேவையில்லை என்பதை அறிந்துகொண்டேன். இதுகுறித்து யாரிடமும் என்னால் சண்டை போட முடியாது.
கரீபியன் பிரீமியர் லீக், வங்தேச பிரீமியர் லீக் ஆகிய போட்டிகளில் நான் மிகச்சிறப்பாக விளையாடினேன். புள்ளிவிவரங்கள் பொய் சொல்லாது. 21 சதங்கள். அதிக அளவிலான சிக்ஸர்கள். இவை கிறிஸ் கெயிலின் திறமையை வெளிப்படுத்தாவிட்டால், வேறு எது என்னை வெளிப்படுத்தும்? என்று தெரியவில்லை.
ஏலத்தின் ஆரம்பக்கட்டத்தில் என்னை யாரும் தேர்வு செய்யாதது ஆச்சர்யமாகவே இருந்தது. நான் பஞ்சாப் அணிக்குத்தான் ஆடவேண்டும் என்று எழுதப்பட்டிருந்ததுபோல. டி20 கிரிக்கெட்டின் பல சாதனைகள் என் வசம் உள்ளன. இந்த வருட ஐபிஎல் தொடரையும் அடுத்த வருட ஒருநாள் உலகக் கோப்பையையும் வெல்லவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என கெய்ல் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.