சென்னை – மும்பை இன்று பலப்பரீட்சை …

Asianet News Tamil  
Published : Nov 03, 2016, 01:41 AM ISTUpdated : Sep 19, 2018, 01:00 AM IST
சென்னை – மும்பை இன்று பலப்பரீட்சை  …

சுருக்கம்

சென்னை,

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை–மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

8 அணிகள் இடையிலான 3–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி இந்தியாவில் 8 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

இந்த போட்டி தொடரின் 28–வது லீக் ஆட்டம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) இரவு நடக்கிறது. இதில் சென்னையின் எப்.சி.–மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி 6 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வியுடன் 9 புள்ளிகள் பெற்று 5–வது இடத்தில் இருக்கிறது. மும்பை அணி 7 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 2 டிரா, 2 தோல்வியுடன் 11 புள்ளிகள் பெற்று 2–வது இடத்தில் உள்ளது.

இந்த சீசனில் உள்ளூரில் சென்னை அணி விளையாடும் 4–வது ஆட்டம் இதுவாகும். உள்ளூரில் டெல்லி அணியிடம் வீழ்ந்த சென்னை அணி, கோவாவை தோற்கடித்து இருந்தது. முந்தைய லீக் ஆட்டத்தில் கேரளாவுடன் டிரா கண்டு இருந்தது. மும்பை அணி கடைசி 2 லீக் ஆட்டங்களில் கோவா, கொல்கத்தா அணிகளை வீழ்த்திய உற்சாகத்துடன் இந்த ஆட்டத்தில் களம் காணுகிறது.

முந்தைய சீசன்களில் மும்பை அணிக்கு எதிரான 4 ஆட்டங்களிலும் சென்னை அணி வெற்றி கண்டு இருக்கிறது. இன்றைய போட்டியில் சென்னை அணி 2 கோல்கள் வித்தியாசத்தில் வென்றால் புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற முடியும். சென்னை அணியில் காயம் காரணமாக முன்னணி வீரர்கள் ஜான் அர்னே ரைஸ் (நார்வே), ஹன்ஸ் முல்டெர் (நெதர்லாந்து) ஆகியோர் ஆடமுடியாத நிலையில் இருப்பது பின்னடைவாக கருதப்படுகிறது. மும்பை அணி நட்சத்திர வீரர் டியாகோ பார்லன் (உருகுவே) தலைமையில் களம் இறங்குகிறது.

இன்றைய போட்டி குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் மார்கோ மெட்டராசி (இத்தாலி) அளித்த பேட்டியில், ‘ஒவ்வொரு வருடமும் எல்லா விஷயங்களும் மாறிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு ஐ.எஸ்.எல். தொடரும் முந்தைய தொடரில் இருந்து முற்றிலும் மாறுபடுகிறது. இந்த சீசனில் எல்லாம் நேர்மாறாக நடக்கிறது. உள்ளூரில் கோவா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி கண்டு வந்த நாம் இந்த தடவை முதல்முறையாக உள்ளூரில் அந்த அணிக்கு எதிராக வென்று இருக்கிறோம். இதனால் வழக்கமாக நாம் வெற்றி பெறும் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தின் முடிவு எப்படி இருக்கும் என்பதில் பயம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த ஆட்டத்தில் 2 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் இடத்துக்கு முன்னேற வேண்டும் என்பது குறித்து கருத்தில் கொள்ளவில்லை. அரை இறுதியை எட்டுவது தான் எங்களது இலக்காகும்’ என்று தெரிவித்தார்.

மும்பை அணியின் பயிற்சியாளர் அலெக்சாண்டர் கியூமாரஸ் (கோஸ்டாரிகா) கருத்து தெரிவிக்கையில், ‘கடந்த இரண்டு சீசனில் விளையாடிய அணியில் இருந்து தற்போதைய எங்கள் அணி முற்றிலும் மாறுபட்டதாகும். அணியில் உள்ள எந்தவொரு வீரருக்கும் கடந்த சீசன்களில் கண்ட தோல்வியின் நினைவுகள் கிடையாது. இது முழுமையாக மாறுபட்ட சூழ்நிலையாகும். சாம்பியன் அணியை எதிர்கொள்கிறோம் என்பதை அறிவோம். நாளைய (இன்று) ஆட்டத்தில் டியாகோ பார்லன் விளையாடுகிறார். அவர் களம் இறங்கும் போது நாங்கள் வெற்றி பெறுகிறோம். அவர் கோல் அடிக்கிறார். அல்லது கோல் அடிக்க உதவுகிறார். எதிரணியினர் அவரை எச்சரிக்கையோடு எதிர்கொள்கின்றனர். இது எங்கள் அணிக்கு மிகவும் நல்லதாகும்’ என்றார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

'இந்தியாவில் கால் வைத்தால்'.. KKR வங்கதேச வீரருக்கு பாஜக மிரட்டல்.. ஷாருக்கான் தேசத் துரோகி.. விமர்சனம்!
'அவர் கதவைத் தட்டவில்லை, உடைக்கிறார்'; சிஎஸ்கே பிளேயிங் லெவனில் சர்பராஸ் கான் வேண்டும்: அஸ்வின்