
சென்னை,
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை - கொல்கத்தா இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து திருவிழாவில், சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 44-வது லீக்கில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி.யும், முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டீ கொல்கத்தாவும் மோதின.
24 ஆயிரத்திற்கும் மேல் கூடியிருந்த இரசிகர்களுக்கு மத்தியில் விறுவிறுப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் பந்து அதிகமான நேரம் சென்னை வீரர்கள் வசமே சுற்றிக் கொண்டிருந்தது. நிறைய ஷாட்டுகளையும் அடித்தனர். 10-வது நிமிடத்தில் சென்னை வீரர் ஹான்ஸ் முல்டெர் கம்பத்தை நோக்கி உதைத்த பந்தை கொல்கத்தா கோல் கீப்பர் டெப்ஜித் துள்ளி குதித்து வெளியே தள்ளி விட்டார்.
39-வது நிமிடத்தில் கொல்கத்தா அணி, உள்ளூர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. சக வீரர் பரிதம் கோடல் வலது பக்கத்தில் இருந்து தூக்கியடித்த பந்தை கொல்கத்தாவின் ஹெல்டெர் போஸ்டிகா தலையால் முட்டி கோலாக்கினார். முதல் பாதியில் கொல்கத்தா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
பிற்பாதியில் பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடியுடன் சென்னை வீரர்கள் முழு உத்வேகத்துடன் விளையாடினர். 54-வது நிமிடத்தில் சென்னையின் எப்.சி. வீரர் டேவிட் சுச்சி பந்துடன் கொல்கத்தாவின் கோல் எல்லைக்குள் ஊடுருவினார். கோல் கணக்கை தொடங்குவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்க, கம்பத்தை நெருங்கிய அவர் ஷாட் அடிப்பதை தவிர்த்து பந்தை குறுக்காக தட்டிவிட்டார். ஆனால் அந்த பக்கம் சக வீரர் இல்லாததால் முயற்சி வீணானது.
அதன்பிறகு தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியதன் பலனாக 77-வது நிமிடத்தில் சென்னை அணி பதில் கோல் திருப்பியது. வலது கார்னர் பகுதியில் இருந்து சபியா அடித்த பந்தை, டேவிட் சுச்சி தலையால் முட்டி கோல் அடித்தார். அதன் பிறகு இரு அணி வீரர்களாலும் கோல் ஏதும் போட முடியவில்லை.
முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. ஏற்கனவே கொல்கத்தாவில் இவ்விரு அணிகள் சந்தித்த ஆட்டமும் சமனில் தான் முடிந்தது.
சென்னை அணி 14 புள்ளிகளுடன் தொடர்ந்து 6-வது இடத்தில் இருக்கிறது. எஞ்சிய 3 ஆட்டங்களில் குறைந்தது 2-ல் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணியால் அரையிறுதி வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.