இந்தியாவின் ஆதிக்கத்தை அடக்கிய சேஸ்-ஹோல்டர்!! கடைசி நேரத்தில் பிரேக் கொடுத்த உமேஷ்

By karthikeyan VFirst Published Oct 12, 2018, 5:27 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்த நிலையில், இரண்டாவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் முடிந்தது. 
 

வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்த நிலையில், இரண்டாவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் முடிந்தது. 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்று இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் விக்கெட்டை அஷ்வின் வீழ்த்தினார். பவலை 22 ரன்களில் அஷ்வின் வெளியேற்றினார்.

இதையடுத்து பிராத்வைட்டுடன் ஹோப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் நிலைக்கவில்லை. இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி வெறும் 20 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில், பிராத்வைட்டை எல்பிடபிள்யூ ஆக்கி பெவிலியனுக்கு அனுப்பினார் குல்தீப்.

இதையடுத்து ஹோப்புடன் ஹெட்மயர் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியையும் இந்திய அணி நிலைக்கவிடவில்லை. மூன்றாவது விக்கெட்டுக்கு 34 ரன்கள் சேர்த்த நிலையில், ஹோப்பை வெளியேற்றினார் உமேஷ் யாதவ். 31.3 ஓவருக்கு 3 விக்கெட் இழப்பிற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 86 ரன்கள் எடுத்த நிலையில், உணவு இடைவேளை விடப்பட்டது.

உணவு இடைவேளை முடிந்து வந்த சிறிது நேரத்திலேயே ஹெட்மயரை பெவிலியனுக்கு அனுப்பினார் குல்தீப். 92 ரன்னுக்கு 4வது விக்கெட்(ஹெட்மயர்), 113 ரன்னுக்கு 5வது விக்கெட்(சுனில் அம்பிரிஷ்), 182 ரன்னுக்கு 6வது விக்கெட்(டவ்ரிச்) என அடுத்தடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட்டுகளை இழந்தது. 

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் சேஸ் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். இன்றைக்குள் வெஸ்ட் இண்டீஸின் முதல் இன்னிங்ஸ் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சேஸுடன் ஜோடி சேர்ந்து அணியை மீட்டெடுத்தார் கேப்டன் ஹோல்டர். சேஸும் ஹோல்டரும் பொறுப்பாக ஆடி விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ரன்களை சேர்த்தனர். 

சிறப்பாக ஆடிய ஹோல்டரும் அரைசதம் கடந்தார். இன்றைய ஆட்டம் முடிய 20 நிமிடங்கள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், கவனமாக ஆடி இன்றைய ஆட்டத்தை முடிக்காமல் உமேஷ் யாதவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார் ஹோல்டர். சேஸ்-ஹோல்டர் ஜோடி 7வது விக்கெட்டுக்கு 104 ரன்களை சேர்த்தது. இதையடுத்து சேஸுடன் பிஷூ ஜோடி சேர்ந்து இன்றைய ஆட்டத்தை முடித்தனர். 

சேஸ் 98 ரன்களுடன் களத்தில் உள்ளார். 7 விக்கெட் இழப்பிற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 295 ரன்கள் எடுத்த நிலையில் இன்றைய ஆட்டம் முடிந்தது. 
 

click me!