இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்!!

By karthikeyan VFirst Published Aug 17, 2018, 10:14 AM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. 
 

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. முதல் இரண்டு போட்டிகளிலுமே தோற்ற இந்திய அணி மூன்றாவது போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. லார்ட்ஸில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த படுதோல்வி, இந்திய வீரர்கள், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவருக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது. 

சுழல் பந்துவீச்சு எடுபடாத லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டிக்கு அஷ்வினுடன் கூடுதல் ஸ்பின் பவுலராக குல்தீப்பை எடுத்ததும் காரணம் என்ற விமர்சனங்கள் எழுந்தன. வீரர்கள் தேர்வில் செய்த தவறும் தோல்விக்கு காரணம் என கோலியும் ஒப்புக்கொண்டார். 

இந்நிலையில், நாளை தொடங்க உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆடிய முரளி விஜய் மற்றும் ராகுல் ஆகிய இருவருமே சரியாக ஆடவில்லை. அதிலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முரளி விஜய், இரண்டு இன்னிங்ஸ்களிலுமே டக் அவுட்டானார். ராகுலும் தவறான ஷாட்களை ஆடி விக்கெட்டை பறிகொடுத்தார். எனவே இவர்களில் ஒருவருக்குப் பதிலாக ஷிகர் தவான் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேபோல, தினேஷ் கார்த்திக் இரண்டு போட்டிகளிலுமே சரியாக ஆடவில்லை. எனவே இவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்டை சேர்க்க வேண்டும் என்பது முன்னாள் வீரர்களின் ஆலோசனையாக உள்ளது. அந்த வகையில், தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. 

காயத்தால் அவதிப்பட்ட பும்ரா, குணமடைந்துவிட்ட நிலையில், குல்தீப் யாதவிற்கு பதிலாக பும்ரா அணியில் சேர்க்கப்படுவார் என கூறப்படுகிறது. பும்ரா, இஷாந்த், ஷமி ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஹர்திக் பாண்டியாவும் வீசுவார். ஸ்பின் பவுலிங்கை பொறுத்தவரை அஷ்வின் இருக்கிறார். 

எனவே இந்திய அணியில் இந்த மாற்றங்கள் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மூன்றாவது போட்டியில் வெல்லும் முனைப்பில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 
 

click me!