
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வெளியேற்றும் சுற்றில் ஐதராபாதை வீழ்த்தி வெளியேற்றியது கொல்கத்தா.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வெளியேற்றும் சுற்ரு பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் கெளதம் கம்பீர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த ஐதராபாத் அணியில் ஷிகர் தவன் - டேவிட் வார்னர் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4.2 ஓவர்களில் 25 ஓட்டங்கள் சேர்த்தது.
ஷிகர் தவன் 11 ஓட்டங்களில் வெளியேற, டேவிட் வார்னருடன் இணைந்தார் கேன் வில்லியம்சன்.
கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீச, வார்னர் - வில்லியம்சன் ஜோடியால் அதிரடியாக ஓட்டங்கள் சேர்க்க முடியவில்லை. இதனால் 10 ஓவர்களில் 61 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது ஐதராபாத். அந்த அணி 12 ஓவர்களில் 75 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது வில்லியம்சன் ஆட்டமிழந்தார். அவர் 26 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 24 ஓட்டங்கள் எடுத்தார்.
அவரைத் தொடர்ந்து வார்னர் 35 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 37 ஓட்டங்கள் சேர்த்து பியூஷ் சாவ்லா பந்துவீச்சில் போல்டு ஆனார். இதன்பிறகு யுவராஜ் சிங் 9 ஓட்டங்களில் வெளியேற, சங்கர் 17 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 22 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த கிறிஸ் ஜோர்டான் டக் அவுட்டாக, நமன் ஓஜா 16 பந்துகளில் 16 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து கடைசிப் பந்தில் ஆடடமிழந்தார்.
இதனால் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 128 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
கொல்கத்தா தரப்பில் கோல்டர் நைல் 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
மழை காரணமாக இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக ஆட்டம் பாதிக்கப்பட்டதால் கொல்கத்தாவுக்கு 6 ஓவர்களில் 48 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டன.
புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் சிக்ஸரை விளாசிய கையோடு, கிறிஸ் லின் ஆட்டமிழக்க, பின்னர் வந்த யூசுப் பதான் முதல் பந்திலேயே ரன் அவுட்டானார்.
இதையடுத்து வந்த கெளதம் கம்பீர் பவுண்டரியை விளாசி ரன் கணக்கைத் தொடங்க, கிறிஸ் ஜோர்டான் வீசிய அடுத்த ஓவரில் உத்தப்பா (1) ஆட்டமிழந்தார். இதையடுத்து இஷாங்க் ஜக்கி களமிறங்க, கம்பீர் ஒரு சிக்ஸரை விளாசினார். இதனால் 2 ஓவர்களில் 21 ஓட்டங்களை எட்டியது கொல்கத்தா.
தொடர்ந்து அசத்தலாக ஆடிய கம்பீர், சித்தார்த் கெளல் வீசிய 4-ஆவது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாச, அதன் வெற்றி எளிதானது. இறுதியில் 5.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 48 ஓட்டங்கள் எடுத்து வெற்றி கண்டது கொல்கத்தா.
கம்பீர் 19 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 32, ஜக்கி 5 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.
ஐதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார், கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இன்று நடைபெறும் இரண்டாவது தகுதிச் சுற்றில் மும்பையை சந்திக்கிறது கொல்கத்தா.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.