பதத்துப்போன புவனேஷின் வேகம்.. ப்ரூஃப் பண்ணிய பும்ரா!! சதத்தை தவறவிட்ட ஹோப்.. கடைசி நேரத்தில் காட்டடி அடித்த நர்ஸ்

By karthikeyan VFirst Published Oct 27, 2018, 5:39 PM IST
Highlights

மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, கடைசி நேரத்தில் நர்ஸின் அதிரடியான பேட்டிங்கால் 50 ஓவர் முடிவில் 283 ரன்களை குவித்தது. 95 ரன்களை குவித்த ஹோப், பும்ராவின் பந்தில் கிளீன் போல்டாகி சதத்தை தவறவிட்டார். 
 

மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, கடைசி நேரத்தில் நர்ஸின் அதிரடியான பேட்டிங்கால் 50 ஓவர் முடிவில் 283 ரன்களை குவித்தது. 95 ரன்களை குவித்த ஹோப், பும்ராவின் பந்தில் கிளீன் போல்டாகி சதத்தை தவறவிட்டார். 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி புனேவில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பவுலிங் தேர்வு செய்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர் குமாரும் பும்ராவும் அணியில் சேர்க்கப்பட்டனர். ஜடேஜா நீக்கப்பட்டு கலீல் அகமது சேர்க்கப்பட்டார். 

முதலில் பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களை புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகிய இருவரும் அதிக ரன்களை குவிக்கவிடாமல் கட்டுப்படுத்தினர். அதனால் ரன்ரேட் குறைவாகவே இருந்தது. தொடக்க வீரர்கள் சந்தர்பால் ஹேம்ராஜ் மற்றும் பவல் ஆகிய இருவரையும் பும்ரா வீழ்த்தினார்.

அந்த அணியின் அனுபவ வீரர் சாமுவேல்ஸை இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது வீழ்த்தினார். இதையடுத்து ஷாய் ஹோப்புடன் அதிரடி வீரர் ஹெட்மயர் ஜோடி சேர்ந்தார். முதல் போட்டியில் சதம், இரண்டாவது போட்டியில் 94 ரன்கள் குவித்த ஹெட்மயர், இந்த போட்டியிலும் களமிறங்கியது முதலே அடித்து ஆட தொடங்கினார். 

கீழே கிடந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரன்ரேட்டை மளமளவென உயர்த்தினார். வழக்கம்போலவே சிக்ஸர்களாக விளாசி கொண்டிருந்தார். 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 21 பந்துகளில் 37 ரன்களை எடுத்த ஹெட்மயர், குல்தீப்பின் பந்தில் அசால்ட்டாக அவுட்டானார். குல்தீப் யாதவ் வீசிய பந்தில் அருமையான ரன் அவுட்டின் மூலம் அபாயகரமான ஹெட்மயரை ஸ்டம்பிங் செய்து பெவிலியனுக்கு அனுப்பினார் தோனி. 

ஹெட்மயரை தொடர்ந்து பவல் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய ஷாய் ஹோப்புடன் ஹோல்டர் ஜோடி சேர்ந்தார். இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து வெஸ்ட் இண்டீஸ் அணியை சரிவிலிருந்து மீட்டனர். எனினும் ஹோல்டர் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். புவனேஷ்வர் குமாரின் பவுலிங்கில் விக்கெட்டை பறிகொடுத்தார் ஹோல்டர். 

அதன்பிறகும் சிறப்பாக ஆடிவந்த ஹோப் சதத்தை நெருங்கினார். கடந்த போட்டியில் சதமடித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை தோல்வியிலிருந்து மீட்ட ஹோப், இந்த முறையும் சதத்தை நெருங்கினார். ஆனால் அவரை சதமடிக்க அனுமதிக்காத பும்ரா, 95 ரன்களில் கிளீன் போல்டாக்கி வெளியேற்றினார். 

8 விக்கெட்டுக்கு பிறகும் வெஸ்ட் இண்டீஸின் அதிரடி குறையவில்லை. அந்த அணியின் நர்ஸ், டெத் ஓவர்களை அடித்து நொறுக்கிவிட்டார். 22 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 40 ரன்களை குவித்து அந்த அணி நல்ல ஸ்கோரை எட்ட உதவினார். எனினும் கடைசி ஓவரில் அவரை அவுட்டாக்கி அனுப்பினார் பும்ரா. இதையடுத்து 50 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்களை குவித்தது. 

இந்திய அணியின் சார்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, தன்னை நம்பி அணியில் எடுத்ததற்கு அர்த்தம் சேர்த்தார். 10 ஓவர்கள் வீசிய பும்ரா 35 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ஆனால் புவனேஷ்வர் குமாரோ 10 ஓவர்கள் வீசி 70 ரன்களை வாரி வழங்கி ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார். அதிலும் அவர் வீசிய 49வது ஓவர்தான் மிகவும் மோசமான ஓவர். அந்த ஓவரில் மட்டும் ஒரு சிக்ஸர், மூன்று பவுண்டரிகள் உட்பட 21 ரன்கள் அடிக்கப்பட்டது. 
 

click me!