விதிமுறைகளை மீறிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு நோட்டீஸ்…

First Published Dec 2, 2016, 12:27 PM IST
Highlights


விதிமுறைகளை மீறிய நடவடிக்கைகள் குறித்து கேரளாவைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது கேரள கிரிக்கெட் சங்கம்.

மும்பையில் நடைபெற்ற கேரளா - கோவா இடையேயான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் சஞ்சு சாம்சனின் நடவடிக்கைகள் விதிமுறைக்கு எதிராக அமைந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

போட்டி நாளன்று, பயிற்சியாளர் அல்லது மேலாளர் அனுமதியின்றி ஓய்வறையிலிருந்து வெளியே சென்ற சாம்சன், இரவு 8.15 மணிக்குத்தான் விடுதிக்குத் திரும்பியுள்ளார்.

இதற்காகப் பலமுறை தொலைப்பேசியில் அழைத்தும் பயனில்லை. இதுகுறித்து விளக்கம் அளித்த சாம்சன், தான் கடற்கரைக்குச் சென்றதாகக் கூறியுள்ளார். ஆனால் இந்த விளக்கத்தை கேரள கிரிக்கெட் சங்கம் ஏற்கவில்லை.

மேலும் கோவாவுக்கு எதிரான போட்டியில் மூன்றாவது நாளன்று விக்கெட்டை இழந்து ஓய்வறைக்குத் திரும்பிய சஞ்சு சாம்சன், கோபத்தில் கிரிக்கெட் பேட்டை உடைத்துள்ளார். இதுவும் விதிமுறைக்கு எதிரான செயல். 

இந்த இரு சம்பவங்கள் குறித்தும் விளக்கம் கேட்டு சஞ்சு சாம்சனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது கேரள கிரிக்கெட் சங்கம். மேலும் இதுகுறித்து விசாரிக்க விசாரணைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 

இதுதவிர, காயம் காரணமாக சஞ்சுவுக்கு விடுமுறை கோரிய அவருடைய தந்தை, கேரள கிரிக்கெட் சங்கத் தலைவர் மேத்யூவிடம் மோசமாகத் தொலைப்பேசியில் பேசியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதுகுறித்தும் விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

tags
click me!