கடைசி நேரத்தில் இந்திய அணியை தனி ஒருவனாக தெறிக்கவிட்ட பிரேஸ்வெல்!!

By karthikeyan VFirst Published Jan 26, 2019, 4:21 PM IST
Highlights

8 விக்கெட்டுகளை அந்த அணி இழந்த பிறகான பிரேஸ்வெல்லின் அதிரடி இந்திய அணியை பாதிக்கவில்லை என்றாலும், இதே அடியை விக்கெட்டுகள் சரிவிற்கு முன் அடித்திருந்தால் கொஞ்சம் கஷ்டம் தான். 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி மவுண்ட் மாங்கனியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, தொடக்க ஜோடியான ரோஹித் - தவான் அமைத்து கொடுத்த நல்ல அடித்தளத்தால், 50 ஓவர் முடிவில் 324 ரன்களை குவித்தது.

325 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க தவறிவிட்டனர். கடந்த போட்டியை போலவே இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர்.

கப்டில் 15 ரன்களில் புவனேஷ்வர் குமாரின் பவுலிங்கில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் முன்ரோவுடன் ஜோடி சேர்ந்த வில்லியம்சன், ஷமியின் பவுலிங்கில் போல்டாகி 20 ரன்களில் வெளியேறினார். முன்ரோ 31 ரன்களில் சாஹலின் பந்தில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து நான்காவது விக்கெட்டாக அந்த அணியின் அனுபவ வீரர் ரோஸ் டெய்லர் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிவந்த டெய்லரை, தனது அபாரமான விக்கெட் கீப்பிங் திறமையால் மிகவும் நுணுக்கமாக ஸ்டம்பிங் செய்து அனுப்பினார் தோனி. 

அதன்பிறகு டாம் லதாம், கோலின் டி கிராண்ட்ஹோம், நிகோல்ஸ் ஆகிய மூவரையும் குல்தீப் யாதவ் வீழ்த்தினார். 166 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நியூசிலாந்து அணியின் பின்வரிசை வீரரான பிரேஸ்வெல், இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை என்கிற ரீதியாக அடித்து ஆடினார். சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக விளாசி அரைசதம் கடந்தார். 9வது விக்கெட்டுக்கு இந்திய அணியை தெறிக்கவிட்டார் பிரேஸ்வெல். 

குல்தீப் வீசிய 33வது ஓவரில் ஒரு சிக்ஸர், சாஹல் வீசிய 34வது ஓவரில் ஒரு சிக்ஸர், குல்தீப் யாதவ் வீசிய 35வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள், சாஹல் வீசிய 36வது ஓவரில் மற்றொரு சிக்ஸர் என ஓவருக்கு ஓவர் பவுண்டரிகளையும் சிக்ஸரையும் அடித்து மிரட்டினார் பிரேஸ்வெல். ஆனால் 8 விக்கெட்டுகளை அந்த அணி இழந்த பிறகான பிரேஸ்வெல்லின் அதிரடி இந்திய அணியை பாதிக்கவில்லை என்றாலும், இதே அடியை விக்கெட்டுகள் சரிவிற்கு முன் அடித்திருந்தால் கொஞ்சம் கஷ்டம் தான். 

அரைசதம் அடித்த பிரேஸ்வெல்லை 57 ரன்களில் புவனேஷ்வர் குமார் வீழ்த்தினார். கடைசி விக்கெட்டாக ஃபெர்குசனை சாஹல் வீழ்த்தினார். நியூசிலாந்து அணி 40.2 ஓவரில் 234 ரன்களுக்கே ஆல் அவுட்டானதை அடுத்து, இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 

click me!