
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் ஊதியத்தை உயர்த்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பி.சி.சி.ஐ.) முடிவு செய்துள்ளது. இதன்படி, ஏ கிரேடு முதல் சி கிரேடு வரை உள்ள வீரர்களுக்கு ஆண்டு ஊதியம் கோடிகளில் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய ஊதிய உயர்வு அமலுக்கு வந்தால், உலகிலேயே அதிக ஊதியம் பெறும் கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியினராகத்தான் இருப்பார்கள்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பணக்கார கிரிக்கெட் வாரியம் என்றால், அது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்பதை கிரிக்கெட் பற்றி அறிந்த அனைவருக்கும் தெரியும். இருந்தும், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா வீரர்களோடு இந்திய வீரர்களை ஒப்பிடும் போது அவர்களின் ஊதியம் மிகக் குறைவானதாகும்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஊதியத்தை உயர்த்துவது குறித்து உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையின் பெயரில் நிர்வாகிகள் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் சமீபத்தில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, மகேந்திர சிங் தோனி, மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி ஆகியோருடன் ஊதிய உயர்வு குறித்து நீண்ட ஆலோசனை நடத்தியுள்ளனர்.
அந்த ஆலோசனையில் ஏ கிரோடு அதாவது முதல்தர வீரர்கள் தற்போது ஆண்டுக்கு ரூ.2 கோடி ஒப்பந்த ஊதியமாகத் தரப்படுகிறது. அதை ஆண்டுக்கு ரூ.12 கோடியாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பி கிரேடு வீரர்களுக்கு தற்போது ஆண்டுக்கு ரூ. ஒருகோடி ஊதியம் தரப்படுகிறது. அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.8 கோடி ஊதியம் தரவும், சி கிரேடு வீரர்கள் தற்போது ஆண்டுக்கு ரூ.50 லட்சம் பெற்றும் வரும் நிலையில் அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4 கோடி ஊதியம் தரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களோடு ஒப்பிடும் போது, இந்திய வீரர்கள் பெற்றுவந்த ஊதியம் இதற்கு முன் மிகக்குறைவாக இருந்தபோதிலும், இந்த ஊதியம் அமலுக்கு வந்தால், அவர்களுக்குஇணையாக உயர்வார்கள். ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்துகேப்டன் ஜோய் ரூட் ஆகியோர் ஆண்டுக்கு ரூ.12 கோடி ஊதியம் பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் கூறுகையில், “ இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஊதியத்தை உயர்த்துவது குறித்து ஏறக்குறைய 4 மணிநேரம், உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்புக் குழுவோடு ஆலோசித்தோம். ஆஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்களைக் காட்டிலும் நமது வீரர்கள் குறைவாக ஊதியம் பெறுகிறார்கள் என்பதை ஏற்றுக்கொண்டோம். ஊதியத்தை உயர்த்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது, ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில்விளையாடும் வீரர்கள் ஊதியம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. விரைவில் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” எனத் தெரிவித்தனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.