கோபா டெல் ரே கால்பந்து கோப்பையை 30-வது முறையாக வென்றது பார்சிலோனா...

First Published Apr 23, 2018, 10:19 AM IST
Highlights
Barcelona won the Copa del Rey football trophy for 30th time


கோபா டெல் ரே கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பார்சிலோனா 5-0 என்ற கோல் கணக்கில் செவில்லா அணியை வீழ்த்தி சாம்பியன் வென்றது. 

கோபா டெல் ரே கால்பந்து போட்டி ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நேற்று நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டத்தில் பார்சிலோனா அணி சார்பில் லூயிஸ் செளரெஸ் 2 கோல்களும், லயோனல் மெஸ்ஸி, ஆன்ட்ரியாஸ் இனியெஸ்டா, பிலிப் கட்டின்ஹோ தலா ஒரு கோலும் அடித்தனர்.

இந்த ஆட்டத்தில் பார்சிலோனாவின் கோல் கணக்கை செளரெஸ் தொடங்கினார். ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் அவர் கோலடிக்க, 31-வது நிமிடத்தில் மெஸ்ஸி பங்களிப்பில் அணியின் கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்ந்தது.
 
செவில்லா தனது முதல் கோலுக்கு முயற்சித்து வந்த நிலையில், பார்சிலோனா தனது 3-வது கோலை எட்டியது. ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் செளரெஸ் மீண்டும் ஒரு கோல் அடிக்க, முதல் பாதி முடிவிலேயே பார்சிலோனா 3-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியிலும் பார்சிலோனாவின் கையே ஓங்கியிருக்க, ஆன்ட்ரியாஸ் இனியெஸ்டா 52-வது நிமிடத்தில் கோலடித்தார். தொடர்ந்து 69வது நிமிடத்தில் ஃபிலிப் கட்டின்ஹோ பெனால்டி கார்னர் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்த, 5 கோல்களை எட்டியது பார்சிலோனா.

அந்த அணியின் தடுப்பாட்டத்தை தகர்க்க முடியாத செவில்லா ஒரு கோல் கூட அடிக்காததால், இறுதியில் பார்சிலோனா 5-0 என்ற கணக்கில் வென்றது.
 
கோபா டெல் ரே கோப்பையை பார்சிலோனா கைப்பற்றுவது இது 30-வது முறையாகும். 
 

tags
click me!