பந்தைச் சேதப்படுத்திய விவகாரம்: ஆஸ்திரேலியப் பயிற்சியாளர் திடீர் ராஜிநாமா...

First Published Mar 30, 2018, 12:47 PM IST
Highlights
Ball Contamination issue Australian coach sudden resignation ...


பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலியப் பயிற்சியாளர் டேரன் லேமன் திடீரென ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்தைச் சேதப்படுத்திய புகாரில் சிக்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் மீது ஆஸ்திரேலிய தலைமை கிரிக்கெட் அமைப்பு நடவடிக்கை மேற்கொண்டது.

அதன்படி, கேப்டனாக இருந்த ஸ்மித், துணை கேப்டனாக இருந்த வார்னர் ஆகியோர் ஓராண்டுக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. பான்கிராஃப்ட் ஒன்பது மாதங்கள் கிரிக்கெட்டில் பங்கேற்க தடை செய்யப்பட்டுள்ளார். 

இந்த தடையை எதிர்த்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பிடம் மேல்முறையீடு செய்ய மூன்று வீரர்களுக்கும் ஒருவார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தடை விதித்தது.

அணி வீரர்கள் பந்தைச் சேதப்படுத்திய புகாரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான டேரன் லேமன் மீது தவறும் இல்லை என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு கூறியுள்ளது. இதனால், அவர் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை.  

எனினும் ஆஸ்திரேலியப் பயிற்சியாளர் டேரன் லேமன் திடீரென ராஜிநாமா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நாளை தொடங்கும் கடைசி டெஸ்டுடன் விடைபெறுவதாக அவர் அறிவித்துள்ளார். வீரர்களிடமிருந்து விடைபெற வேண்டும் என்று நான் எடுத்த முடிவு மிகவும் கடினமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

tags
click me!