உலக கோப்பை அணியில் அவரு கண்டிப்பா இருப்பாரு!! ராயுடு, தோனியை விடுங்க.. அவர கூட அந்த வரிசையில் இறக்கலாம்.. முன்னாள் வீரர் அதிரடி

By karthikeyan VFirst Published Feb 14, 2019, 10:22 AM IST
Highlights

முதல் டி20 போட்டியில் முக்கியமான இடமான மூன்றாவது வரிசையில் களமிறக்கப்பட்டார். அதில் பெரிதாக சோபிக்கவில்லை. பின்னர் இரண்டாவது போட்டியில் மூன்றாம் வரிசையில் களமிறக்கப்படவில்லை. 

உலக கோப்பை அணியில் விஜய் சங்கரை எடுத்து, அவரை நான்காம் வரிசையில் கூட களமிறக்கலாம் என்று லக்‌ஷ்மிபதி பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமான விஜய் சங்கர், நியூசிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகளில் 3ல் ஆடினார். அதில் கடைசி போட்டியில் ராயுடுவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்பாக ஆடினார் விஜய் சங்கர். அந்த ஆட்டம் அவர் மீதான நம்பிக்கையை அணி நிர்வாகத்துக்கு அதிகரித்தது. 

அதன்பிறகு முதல் டி20 போட்டியில் முக்கியமான இடமான மூன்றாவது வரிசையில் களமிறக்கப்பட்டார். அதில் பெரிதாக சோபிக்கவில்லை. பின்னர் இரண்டாவது போட்டியில் மூன்றாம் வரிசையில் களமிறக்கப்படவில்லை. ஆனால் கடைசி போட்டியில் 213 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் தவான், தொடக்கத்திலேயே விக்கெட்டை பறிகொடுக்க, இக்கட்டான மற்றும் அடித்து ஆட வேண்டிய சூழலில் மூன்றாம் வரிசையில் களமிறக்கப்பட்டார் விஜய் சங்கர். தன் மீது அணி நிர்வாகம் வைத்த நம்பிக்கையை கெடுக்காமல், ரோஹித்துடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அடித்து ஆடினார் விஜய் சங்கர். 28 பந்துகளில் 43 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ரோஹித் - விஜய் சங்கர் பார்ட்னர்ஷிப் முக்கியமானதாக அமைந்தது. 

பவுலிங்கில் விஜய் சங்கர் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், பேட்டிங்கில் ஓரளவிற்கு ஆடினார். ஃபீல்டிங்கும் நன்றாக செய்தார். பவுண்டரி லைனிலிருந்து நேரடியாக ஸ்டம்பை அடித்து டெய்லரை அவர் செய்த ரன் அவுட் அபாரமானது. நியூசிலாந்து தொடரில் விஜய் சங்கர் சிறப்பாக ஆடியிருந்தார். 

ஹர்திக் பாண்டியாவிற்கு மாற்றாக அணியில் இடம்பெற்றிருந்த விஜய் சங்கர், உலக கோப்பை அணிக்கான வீரர்கள் தேர்வில் தனது பெயரையும் பரிசீலிக்கும் வண்ணம் செய்துவிட்டார். பவுலிங் போட அவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் கிடைத்த ஒருசில வாய்ப்புகளையும் பெரிதாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்றாலும் ஓரளவிற்கு வீசினார். ஆனால் பேட்டிங்கில் தனது திறமையை நிரூபித்தார். 

விஜய் சங்கர் நியூசிலாந்து தொடரில் நன்றாக ஆடியதன் விளைவாக, உலக கோப்பை அணிக்கான 2-3 வீரர்களுக்கான பரிசீலனையில் விஜய் சங்கரின் பெயரும் உள்ளது என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், விஜய் சங்கர் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் லக்‌ஷ்மிபதி பாலாஜி, விஜய் சங்கர் கண்டிப்பாக உலக கோப்பை அணியில் 15 வீரர்களில் ஒருவராக இடம்பிடிப்பார். அவர் பேட்டிங்கில் அபாரமாக ஆடி தனது திறமையை நிரூபித்துள்ளார். அவருக்கு கிடைத்த குறைந்த வாய்ப்புகளில் சிறப்பாக ஆடியுள்ளார். உலக கோப்பை அணியில் ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை என்றாலும் ரிசர்வ் வீரர்களில் ஒருவராக சேர்க்கப்பட கண்டிப்பாக அவரது பெயர் தீவிரமாக பரிசீலிக்கப்படும். ஆடும் லெவனில் இடம்பெற கடுமையாக உழைக்கவும் போராடவும் வேண்டும். இதுவரை ஒரு பேட்ஸ்மேனாக விஜய் சங்கர் தன்னை நிரூபித்துள்ளார். இதன்மூலம் தனது பெயரை எளிதாக புறந்தள்ளிவிட முடியாதபடி வலுவான ஒரு இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணி இன்னுமே 4ம் வரிசை வீரருக்கான பரிசோதனைகளை செய்துகொண்டிருப்பதாகவே நினைக்கிறேன். அந்த வகையில் அந்த இடத்திற்கு விஜய் சங்கர் பொருத்தமாக இருப்பார். விஜய் சங்கர் அணியில் இருந்தால் 4ம் வரிசைக்கான சரியான மாற்று வீரர் அவர் என்று பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். 

நீண்ட தேடுதல் படலத்திற்கு பிறகு நான்காம் வரிசையில் ராயுடு உறுதி செய்யப்பட்டுள்ளார். அதிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தோனி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியதால் அவரைக்கூட நான்காம் வரிசையில் இறக்கலாம் என்ற கருத்து உள்ளது. அதுமட்டுமல்லாமல் சூழலுக்கு ஏற்றவகையில், கோலி கூட சில தருணங்களில் நான்காம் வரிசையில் இறக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவே பார்க்கப்படுகிறது. 
 

click me!