
பாகிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில், ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 263 ஓட்டங்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 45 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 265 ஓட்டங்கள் எடுத்து வென்றது.
முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச தீர்மானித்தது. பேட் செய்ய வந்த பாகிஸ்தானில் தொடக்க வீரர் ஹஃபீஸ் 4 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, உடன் வந்த ஷர்ஜீல் கான் அரை சதமடித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த பாபர் ஆஸம் அதிகபட்சமாக 84 ஓட்டங்கள் எடுத்தார். 100 பந்துகளை சந்தித்த அவர், 4 பவுண்டரிகள் 1 சிக்ஸர் விளாசினார். ஷோயிப் மாலிக், உமர் அக்மல் தலா 39 ஓட்டங்கள் எடுத்தனர்.
தொடர்ந்து ஆடிய ஆஸாத் ஷஃபிக் 5, இமத் வாஸிம் 9 ஓட்டங்களில் வீழ்ந்தனர். 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 263 ஓட்டங்கள் எடுத்தது பாகிஸ்தான். முகமது ரிஸ்வான் 14, முகமது ஆமிர் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஆஸ்திரேலிய தரப்பில் ஹேஸில்வுட் 3, டிராவிஸ் ஹெட் 2, ஸ்டான்லேக், கம்மின்ஸ் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 264 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய ஆஸ்திரேலியாவில் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் அணியை வெற்றிக்கு வழி நடத்தினார்.
முன்னதாக, தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் 35, உஸ்மான் கவாஜா 9 ஓட்டங்களில் வீழ்ந்தனர். அடுத்து வந்த ஸ்மித் 104 பந்துகளில் 11 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 108 ஓட்டங்கள் விளாசினார். அவருடன் கை கோத்த ஹேண்ட்ஸ்கோம்ப் 84 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 82 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
45 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 265 ஓட்டங்கள் எடுத்து வென்றது ஆஸ்திரேலியா. ஸ்மித் 104, டிராவிஸ் ஹெட் 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஸ்மித் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.