
பாகிஸ்தானுக்கு எதிரான 4-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 86 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸ்திரேலியா.
இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் 119 பந்துகளில் 2 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 130 ஓட்டங்கள் குவித்தார்.
இதன்மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் 3-1 என முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலியா, தொடரையும் கைப்பற்றியுள்ளது.
சிட்னி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா-டேவிட் வார்னர் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 17.2 ஓவர்களில் 92 ஓட்டங்கள் குவித்தது.
கவாஜா 30 ஓட்டங்களில் வெளியேற, கேப்டன் ஸ்மித் களம்புகுந்தார். அவர் பந்துகளை வீணடிக்காமல் விளையாட, மறுமுனையில் அதிரடியாக ஆடிய வார்னர் 98 பந்துகளில் சதமடித்தார்.
ஆஸ்திரேலியா 35.3 ஓவர்களில் 212 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது வார்னர் ஆட்டமிழந்தார். அவர் 130 ரன்கள் ஓட்டங்கள் குவித்தார்.
வார்னர்-ஸ்மித் ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 120 ஓட்டங்கள் குவித்தது. வார்னரைத் தொடர்ந்து ஸ்மித் 49 ரன்களில் வெளியேறினார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட்டும், மேக்ஸ்வெல்லும் அதிரடியாக ஆடி 10.2 ஓவர்களில் 100 ஓட்டங்கள் குவித்தனர்.
டிராவிஸ் ஹெட் 36 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்கள் சேர்த்தார். மேக்ஸ்வெல் 44 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 78 ஓட்டங்கள் சேர்த்து வெளியேற, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 353 ஓட்டங்கள் குவித்தது ஆஸ்திரேலியா.
பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியில் ஷர்ஜீல் கான் 74, ஷோயிப் மாலிக் 47, முகமது ஹபீஸ் 40 ஓட்டங்கள் சேர்த்தபோதும், எஞ்சிய வீரர்கள் விரைவாக வெளியேறினர். இதனால் 43.5 ஓவர்களில் 267 ஓட்டங்களுக்கு சுருண்டது.
ஆஸ்திரேலியத் தரப்பில் ஹேஸில்வுட், ஆடம் ஸம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
டேவிட் வார்னர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.