ரோஹித் சர்மாவின் போராட்டம் வீண்.. ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த இந்தியா

By karthikeyan VFirst Published Jan 12, 2019, 4:01 PM IST
Highlights

கடைசி 5 ஓவர்களில் 75 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. இருமுனையில் உள்ள வீரர்களுமே அடித்து ஆட வேண்டிய நிலையில், ஒருமுனையில் ரோஹித் சர்மா அடித்தாலும் மறுமுனையில் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆட ஆளில்லை என்பதால் நெருக்கடி அதிகரித்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சதம் விளாசி தனி ஒருவனாக இலக்கை விரட்ட போராடிய ரோஹித் சர்மாவின் போராட்டம் வீணானது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 288 ரன்களை குவித்தது. 

289 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் தவான் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி வெளியேற, நான்காவது ஓவரில் கோலியும் ராயுடுவும் ரிச்சர்ட்ஸனின் அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழந்தனர். 4 ரன்னுக்கே 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 4வது ஓவரிலேயே களத்துக்கு வந்தார் தோனி. 

ரோஹித் - தோனி கூட்டணி நிலைத்து ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் நிதானமாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 13 ஓவர் வரை நிதானமாக ஆடிய இருவரும் பிறகு சில ஷாட்களை அடித்து ஆடினர். இருவரும் பொறுப்பாக ஆடி 4வது விக்கெட்டுக்கு 137 ரன்களை குவித்தனர். ரோஹித் சர்மா அரைசதம் கடக்க, அவரை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தோனியும் அரைசதம் கடந்தார். 

ஆனால் அரைசதம் கடந்த மாத்திரத்திலேயே 51 ரன்னில் ஆஸ்திரேலிய அணியின் அறிமுக பவுலர் ஜேசன் பெஹ்ரண்ட்ரோஃபிடம் விக்கெட்டை பறிகொடுத்தார் தோனி. பின்னர் ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக், ரிச்சர்ட்ஸனின் பந்தில் போல்டாகி 12 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்பாக ஆடிய ரோஹித் சர்மா, சதம் விளாசினார். தினேஷ் கார்த்திக்கின் விக்கெட்டுக்கு பிறகு ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த ஜடேஜாவும் சோபிக்கவில்லை. 43 ஓவர்களுக்கு இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து இக்கட்டான நிலையில் இருந்தது. இந்நிலையில், 44வது ஓவரின் கடைசி 2 பந்துகளில் சிக்ஸரும் பவுண்டரியும் விளாசினார் ரோஹித். 

ஆனால் அடுத்த ஓவரில் ஜடேஜா அவுட்டாக, பின்னர் களத்திற்கு வந்த புவனேஷ்வர் குமார் அந்த ஓவர் முழுவதையும் முழுவதுமாக முழுங்கினார். இதையடுத்து இந்திய அணிக்கு நெருக்கடி அதிகமானது. கடைசி 5 ஓவர்களில் 75 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. இருமுனையில் உள்ள வீரர்களுமே அடித்து ஆட வேண்டிய நிலையில், ஒருமுனையில் ரோஹித் சர்மா அடித்தாலும் மறுமுனையில் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆட ஆளில்லை என்பதால் நெருக்கடி அதிகரித்தது. ஆஸ்திரேலிய பவுலர்கள், பவுண்டரியை தடுப்பதற்காக ஸ்லோ டெலிவரிகளாக வீச, ரோஹித் சர்மா 133 ரன்களில் ஆட்டமிழந்தார். 

ரோஹித்தின் விக்கெட்டுக்கு பிறகு தோல்வி உறுதியானது. எனினும் கடைசி நேரத்தில் சில பவுண்டரிகளை அடித்தார் புவனேஷ்வர் குமார். இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 

click me!