
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸ்திரேலியா.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சிக் காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ஆரோன் ஃபிஞ்ச் ஓட்டங்கள் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே ஹென்றி வீசிய முதல் ஓவரில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.
இதையடுத்து டேவிட் வார்னருடன் இணைந்தார் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித். ஆரம்பம் முதலே அசத்தலாக ஆடிய ஸ்மித், ஹென்றி பந்துவீச்சில் ஒரு சிக்ஸரை விளாசி ஆட்டத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தினார். அந்த அணி 47 ஓட்டங்களை எட்டியபோது லாக்கி பெர்குசன் பந்துவீச்சில் வார்னர் போல்டு ஆனார். அவர் 29 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்தார். பின்னர் வந்த ஜார்ஜ் பெய்லி 17 ரன்களிலும், மிட்செல் மார்ஷ் 1 ஓட்டங்கத்திலும் ஆட்டமிழந்தனர். இதனால் 20.1 ஓவர்களில் 92 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலியா.
இதையடுத்து ஸ்மித்துடன் இணைந்தார் டிராவிஸ் ஹெட். அசத்தலாக ஆடிய இந்த ஜோடி, ஆஸ்திரேலியாவை சரிவிலிருந்து மீட்டது. நிதானமாக ஆடிய ஸ்மித் 70 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். டிராவிஸ் ஹெட் 7 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஹென்றி கோட்டைவிட்ட கேட்ச்சால் ஆட்டமிழப்பதிலிருந்து தப்பினார்.
மறுமுனையில் சற்று வேகமாக ஓட்டங்கள் சேர்க்க ஆரம்பித்த ஸ்மித், 120 பந்துகளில் சதமடித்தார். நியூஸிலாந்துக்கு எதிராக அவர் அடித்த முதல் சதம் இது. இதனால் 39-ஆவது ஓவரில் 200 ஓட்டங்களை எட்டியது ஆஸ்திரேலியா. இதனிடையே பந்துகளை வீணடிக்காமல் விளையாடிய டிராவிஸ் ஹெட் 56 பந்துகளில் அரை சதத்தை எட்டினார்.
ஆஸ்திரேலியா 219 ஓட்டங்களை எட்டியபோது இந்த ஜோடியைப் பிரித்தார் டிரென்ட் போல்ட். டிராவிஸ் ஹெட் 60 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் சேர்த்து போல்ட்டிடமே கேட்ச் ஆனார். டிராவிஸ் ஹெட்-ஸ்டீவன் ஸ்மித் ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 127 ஓட்டங்கள் குவித்தது.
இதன்பிறகு வந்த விக்கெட் கீப்பர் மேத்யூ வேட், அதிரடியாக ஆட, மறுமுனையில் கேப்டன் ஸ்மித்தும் சிக்ஸர்களை பறக்கவிட்டார். நீஷம் வீசிய 45-ஆவது ஓவரில் மேத்யூ வேட் 3 சிக்ஸர்களை விரட்ட, அந்த ஓவரில் மட்டும் 21 ஓட்டங்கள் கிடைத்தன. போல்ட் வீசிய அடுத்த ஓவரின் முதல் 3 பந்துகளில் முறையே சிக்ஸர், 2 மற்றும் பவுண்டரியை விளாசிய ஸ்மித் 148 பந்துகளில் 150 ஓட்டங்கள் எட்டினார். இந்த ஜோடி 42 முதல் 46 வரையிலான 5 ஓவர்களில் மட்டும் 57 ஓட்டங்கள் குவித்தது.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஸ்மித் 164 ரன்கள் சேர்த்த நிலையில் போல்ட் பந்துவீச்சில் மன்றோவிடம் கேட்ச் ஆனார். அவர் 157 பந்துகளில் 4 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 164 ஓட்டங்கள் குவித்தார். இதையடுத்து கம்மின்ஸ் களமிறங்க, மேத்யூ வேட் 22 பந்துகளில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு வந்த மிட்செல் ஸ்டார்க் 11 ஓட்டங்களில் நடையைக் கட்ட, ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 324 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் பேட் செய்த நியூஸிலாந்து அணியில் டாம் லதாம் 2 ஓட்டங்களிலும், பின்னர் வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 9 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, மார்ட்டின் கப்டிலுடன் இணைந்தார் ஜேம்ஸ் நீஷம். அவர் ஒருபுறம் நிதானமாக ஆட, மறுமுனையில் அசத்தலாக ஆடிய கப்டில் 55 பந்துகளில் அரை சதத்தை எட்டினார்.
கப்டில் தொடர்ந்து அதிரடியாக ஆட, ஜேம்ஸ் நீஷம் 34 ஓட்டங்களில் (36 பந்துகள்) ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த வாட்லிங் 6 ஓட்டங்களில் நடையைக் கட்ட, காலின் மன்றோ களம்புகுந்தார். மன்றோ வந்த வேகத்தில் சிக்ஸரை விளாச, மார்ட்டின் கப்டில், மிட்செல் மார்ஷ் பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி 93 பந்துகளில் சதத்தை எட்டினார். நியூஸிலாந்து அணி 185 ஓட்டங்களை எட்டியபோது கப்டில் ஆட்டமிழந்தார். அவர் 102 பந்துகளில் 6 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 114 ஓட்டங்கள் குவித்தார்.
இதன்பிறகு களமிறங்கிய மிட்செல் சேன்ட்னர் டக் அவுட்டாக, கிராண்ட்ஹோம் 6 ஓட்டங்கள் வெளியேறினார்.
இதையடுத்து மன்றோவுடன் இணைந்தார் ஹென்றி. இந்த ஜோடி 50 ஓட்டங்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய ஹென்றி 15 பந்துகளில் 27 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மன்றோ 49 ரன்களிலும், பெர்குசன் ரன் ஏதுமின்றியும் வெளியேற, 44.2 ஓவர்களில் 256 ஓட்டங்கள் ஆட்டமிழந்தது நியூஸிலாந்து.
ஆஸ்திரேலியத் தரப்பில் ஹேஸில்வுட் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் மார்ஷ், பட் கம்மின்ஸ், ஆடம் ஸம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
ஸ்டீவன் ஸ்மித் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.