
பாரீஸ்,
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே சாம்பியன் பட்டம் வென்றார். அத்துடன் அவர் உலக தர வரிசையில் முதலிடத்தை பிடித்தார்.
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்தது. இதில் நேற்று இரவு நடந்த ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் உலக தர வரிசையில் முதலிடத்தை நேற்று முன்தினம் பிடித்த இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே 6–3, 6–7(4–7), 6–4 என்ற செட் கணக்கில் 27–வது இடத்தில் இருக்கும் ஜான் இஸ்னரை (அமெரிக்கா) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.
முந்தைய நாளில் அரை இறுதியில் ஆன்டி முர்ரேவை எதிர்த்து விளையாட இருந்த 5–ம் நிலை வீரர் மிலோஸ் ராவ்னிக் (கனடா) காயம் காரணமாக விலகியதால் அவர் தர வரிசையில் முதலிடத்தை பிடித்தார்.
இறுதிப்போட்டிக்கு முன்னேறியதும் ஆன்டி முர்ரே, உலக ஆண்கள் ஒற்றையர் பிரிவு தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். கடந்த 122 வாரங்களாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 2–வது இடத்துக்கு தள்ளப்பட்டார். புதிய தர வரிசை பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. நவீன தர வரிசை பட்டியல் அறிமுகமான (1973–ம் ஆண்டு முதல்) பிறகு நம்பர் ஒன் இடத்தை பிடித்த 26–வது வீரர் ஆன்டி முர்ரே ஆவார்.
அத்துடன் நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். 29 வயதான ஆன்டி முர்ரே அதிக வயதில் நம்பர் இடத்தை பிடித்த 2–வது வீரர் ஆவார். இதற்கு முன்பு 1974–ம் ஆண்டில் ஆஸ்திரேலிய வீரர் ஜான் நியூகாம்ப் 30 வயதில் முதலிடத்தை பிடித்து இருந்தார்.
நம்பர் ஒன் இடத்தை பிடித்தது குறித்து ஆன்டி முர்ரே கருத்து தெரிவிக்கையில், ‘நம்பர் ஒன் இடம் இன்று (நேற்று) ஒரே நாளில் வந்தது இல்லை. கடந்த 12 மாதங்களாக போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இந்த நிலையை எட்டி இருக்கிறேன். கடந்த சில மாதங்கள் எனது டென்னிஸ் வாழ்க்கையில் மிகவும் சிறப்புக்குரியதாகும். தர வரிசையில் உச்ச நிலையை எட்டியது பெருமை அளிக்கிறது. கடந்த சில வருடங்களாக நம்பர் ஒன் இடத்தை எட்டுவதே எனது இலக்காக இருந்தது’ என்றார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.