கோலி, ரோஹித், ரஹானே குறித்த முன்னாள் கேப்டனின் கருத்து..!

First Published Dec 22, 2017, 4:17 PM IST
Highlights
ajit wadekar about kohli rohit rahane


விராட் கோலி தலைமையில் இந்திய அணி உலகில் எங்கு வேண்டுமானாலும் நன்றாக ஆடி வெற்றி பெறும் திறமை கொண்டது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் தெரிவித்துள்ளார்.

1971-ல் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் என இரட்டைத் தொடரை அவர்கள் மண்ணில் வென்ற பெருமைக்குரியவர் அஜித் வடேகர்.

டாக்டர் ராமேஷ்வர் தயாள் வாழ்நாள் சாதனையாளர் விருது வடேகருக்கு மும்பையில் வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பேசிய வடேகர், விராட் கோலி முற்றிலும் வித்தியாசமான ஒரு வார்ப்பில் உருவானவர். அருமையான, ஆக்ரோஷமான வீரர். இன்றைய கிரிக்கெட் உலகில் ரசிகர்களை மைதானத்துக்கு வரவைப்பதில் விராட் கோலி போன்ற ஒரு கிரிக்கெட் வீரர் தேவை.

கோலி ஆக்ரோஷமாகவும் அணிக்காகவும் ஆடுகிறார். அவரிடம் எனக்கு பிடித்த விஷயம் என்பது, எப்போதுமே வெற்றி பெறுவதற்காகவே ஆடுகிறார். தோல்வி அடைவதை அவர் விரும்புவதில்லை. அது மிகப்பெரிய விஷயமாகும். 

அவுட் ஆஃப் ஃபார்மில் இருக்கும் அஜிங்கியா ரஹானே பற்றி கூறும்போது, சுனில் கவாஸ்கருக்குக் கூட ரன்கள் எடுக்க முடியாத காலக்கட்டங்கள் இருந்துள்ளன. எந்த ஒரு சிறந்த வீரருக்கும் இந்த நிலை ஏற்படும். இந்தியா உற்பத்தி செய்த டாப் கிரிக்கெட் வீரர்களில் ரஹானேவும் ஒருவர். எனவே இந்த மோசமான ஃபார்மிலிருந்து அவர் நிச்சயம் மீண்டெழுவார். அவர் தொடர்ந்து விளையாடினால் இழந்த தன்னம்பிக்கையை மீண்டும் பெறுவார். அவர் மீண்டெழுவது இந்திய அணிக்கு மிகவும் முக்கியம்.

சமகால வீரர்கள் திறமையானவர்கள். இவர்கள் அதிக ஷாட்களை ஆடுகின்றனர். விராட் கோலி மட்டுமல்ல; ரோஹித்தும் அபாயகரமான ஒரு வீரர். தென் ஆப்பிரிக்க அணி எப்போதும் வீழ்த்துவதற்குக் கடினமான அணி. பிட்ச்களில் வேகம் அதிகமிருக்கும். எனவே இந்திய வீரர்கள் அதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என அஜித் வடேகர் தெரிவித்துள்ளார்.
 

click me!