
மும்பை அணியில் இருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னேவை மும்பை அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
ஐபிஎல் 11வது சீசன் நடந்துவருகிறது. நடப்பு சாம்பியனான மும்பை அணி, இந்த சீசனில் இதுவரை விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலும் போராடி தோல்வியடைந்துள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, இரண்டாவதாக பவுலிங் வீசியபோது, கடைசி ஓவர் வரை போட்டியை இழுத்து சென்று எதிரணிக்கு அழுத்தம் கொடுத்தது.
ஆனால், கடுமையாக போராடியபோதும் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இல்லாததும் அதற்கு ஓர் காரணமாக பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸை மும்பை அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால் முதுகு வலியால் அவதிப்பட்ட அவர், ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார்.
அவர் இருந்திருந்தால், மும்பை வெற்றி அடைந்திருக்குமோ என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழாமல் இல்லை. எனவே அவரது இடத்தை நிரப்புவதற்காக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னேவை மும்பை அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆடம் மில்னேவின் வருகை, மும்பை அணியின் வெற்றிக்கு வழிவகுக்கிறதா? என்பதை பார்ப்போம். இன்று மும்பை அணி, டெல்லியுடன் மோதுகிறது. இரு அணிகளுமே, விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளதால், இந்த போட்டியில் வெற்றி பெற போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.