
இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணியில் இருந்து விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹா காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பார்த்திவ் படேல் சேர்க்கப்பட்டுள்ளார்.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது ரித்திமான் சாஹாவின் இடது தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டதை பிசிசிஐ மருத்துவக் குழு உறுதி செய்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
அதனால் அவர் 3-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார் பார்த்திவ் படேல். அதேநேரத்தில் சர்வதேச போட்டியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்துள்ளது.
31 வயதான பார்த்திவ் படேல் 2002-இல் தனது 17-ஆவது வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் கண்டார். கடைசியாக 2008 ஆகஸ்டில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
இதுவரை 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பார்த்திவ் படேல், 41 கேட்சுகளை பிடித்திருப்பதோடு, 8 ஸ்டெம்பிங்குகளையும் செய்துள்ளார்.
சாஹாவுக்குப் பதிலாக யாரை அணியில் சேர்க்கலாம் என தேர்வுக்குழுவினர் விவாதித்தபோது ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், நமன் ஓஜா ஆகியோரின் பெயர்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ரிஷப் பந்த் ரஞ்சி கிரிக்கெட்டில் முச்சதம் உள்பட ஏராளமான ரன்கள் குவித்திருந்தாலும், அவருக்கு மிக இளம் வயதில் டெஸ்ட் அணியில் வாய்ப்பு கொடுப்பது சரியாக இருக்காது என தேர்வுக் குழுவினர் கருதியதாகத் தெரிகிறது.
தினேஷ் கார்த்திக்கும் சிறப்பாக ஆடி ரன் குவித்து வருகிறார். எனினும் விக்கெட் கீப்பிங்கில் பார்த்திவ் படேல் சிறப்பாக செயல்பட்டு வருவதோடு, இடது கை பேட்மேனாக இருப்பதால் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 3-ஆவது டெஸ்ட் போட்டி வரும் சனிக்கிழமை மொஹாலியில் தொடங்குகிறது.
அணி விவரம்:
விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்ய ரஹானே, கே.எல்.ராகுல், முரளி விஜய், சேதேஷ்வர் புஜாரா, கருண் நாயர், பார்த்திவ் படேல் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ், அமித் மிஸ்ரா, முகமது சமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார், ஹார்திக் பாண்டியா.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.