
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 53 ஆண்டுகளுக்குப் பிறகு நியூஸிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா என்ற பெருமையை சுழற்பந்து வீச்சாளர் மகாராஜ் வாங்கித் தந்துள்ளார்.
நியூஸிலாந்தின் டுனெடின் நகரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 122.4 ஓவர்களில் 308 ஓட்டங்கள் குவித்தது. அந்த அணியில் டீன் எல்கர் 140, டெம்பா பெளமா 64 ஓட்டங்கள் எடுத்தனர்.
நியூஸிலாந்து தரப்பில் போல்ட் 4 விக்கெட்டுகளையும், நீல் வாக்னர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸ் ஆடிய நியூஸிலாந்து அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 55 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
3-ஆவது நாளான நேற்றுத் தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணியில் ஜீதன் படேல் 16 ஓட்டங்களில் வெளியேற, பின்னர் வந்த ஜேம்ஸ் நீஷம் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு பி.ஜே.வாட்லிங் களம்புகுந்தார். இதனிடையே கேன் வில்லியம்சன் 195 பந்துகளில் சதமடித்தார். இது, டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 16-ஆவது சதமாகும். தொடர்ந்து சிறப்பாக ஆடிய வில்லியம்சன் 130 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் டி காக்கிடம் கேட்ச் ஆனார்.
இதன்பிறகு வந்த மிட்செல் சேன்ட்னர் 4 ஓட்டங்களில் கிளம்ப, நீல் வாக்னர் களம்புகுந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய வாட்லிங் அரை சதமடித்த கையோடு, மகாராஜ் பந்துவீச்சில் போல்டு ஆனார்.
பின்னர் வந்த டிரென்ட் போல்ட் 2 ஓட்டங்களில் வெளியேற, ரிட்டையர் ஹர்ட் முறையில் வெளியேறிய டெய்லர் மீண்டும் களம்புகுந்தார்.
மறுமுனையில் அசத்தலாக ஆடிய நீல் வாக்னர் 32 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 32 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, நியூஸிலாந்தின் முதல் இன்னிங்ஸ் 114.3 ஓவர்களில் 341 ஓட்டங்களோடு முடிவுக்கு வந்தது. டெய்லர் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தென் ஆப்பிரிக்கத் தரப்பில் கேசவ் மகாராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் 53 ஆண்டுகளுக்குப் பிறகு நியூஸிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் மகாராஜ்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 33 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா, 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 18 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 38 ஓட்டங்கள் எடுத்துள்ளது. டீன் எல்கர் 12, ஆம்லா 23 ரன்களுடன் களத்தில் உள்ளனர். முன்னதாக ஸ்டீபன் குக் டக் அவுட்டானார்.
ஒட்டுமொத்தத்தில் தென் ஆப்பிரிக்க அணி 5 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.