
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி 4-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஒரு நாள் போட்டித் தரவரிசையில் முன்னதாக முதலிடம் பிடித்திருந்த கோலி, தற்போது டி-20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். எனினும், டெஸ்ட் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் அவர் வருவது இதுவே முதல் முறையாகும்.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடியதை அடுத்து, கோலி இத்தகைய முன்னேற்றத்தைக் கண்டுள்ளார்.
கோலிக்கு 2 இடங்கள் முன்பாக, இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் 2-ஆவது இடத்தில் உள்ளார். இருவருக்கும் இடையே 22 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளதால், வரும் சனிக்கிழமை மொஹாலியில் தொடங்கும் 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கோலி சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அவர் மேலும் முன்னேறும் வாய்ப்பு உள்ளது.
மற்றொரு இந்திய வீரரான சேத்தேஷ்வர் புஜாரா ஒரு இடம் முன்னேறி 9-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோவ் 4 இடங்கள் முன்னேறி 12-ஆவது இடத்துக்கும், பென் ஸ்டோக்ஸ் 5 இடங்கள் முன்னேறி 28-ஆவது இடத்துக்கும் வந்துள்ளனர்.
சமி முன்னேற்றம்: டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி 5 இடங்கள் முன்னேறி, முதல் முறையாக 21-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
ரவீந்திர ஜடேஜா ஓரிடம் முன்னேற்றம் கண்டு 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 5-ஆவது இடத்துக்கும், மொயீன் அலி 23-ஆவது இடத்துக்கும் ஏற்றம் கண்டுள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூஸிலாந்து வென்றதை அடுத்து, அந்த அணியின் பேட்ஸ்மேன் வாட்லிங் 36-ஆவது இடத்துக்கும், ஹென்றி நிகோலஸ் 79-ஆவது இடத்துக்கும், ஜீத் ராவல் 60-ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.
பந்துவீச்சாளர் பட்டியலில் காலின் 61-ஆவது இடத்துக்கு ஏற்றம் கண்டுள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.