கராத்தே போட்டியில் 21 தங்கம் உள்பட 49 பதக்கங்கள் - சென்னை, திருச்சி மாணவ, மாணவிகள் அபாரம்…

First Published Aug 23, 2017, 9:30 AM IST
Highlights
49 medals including 21 gold in karate competition - Chennai Trichy students won


தென்மண்டல அளவிலான கராத்தே போட்டியில் 21 தங்கம் உள்பட 49 பதக்கங்களை வென்று சென்னை, திருச்சியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அசத்தியுள்ளனர்.

தென்மண்டல அளவிலான தகுதிப் போட்டிகள் சென்னை நேரு விளையாட்டரங்கில் கடந்த 12, 13-ஆம் தேதிகளில் நடைபெற்றன.

இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை அகில இந்திய கராத்தே டோ கூட்டமைப்புடன் இணைந்த தமிழ்நாடு கராத்தே சங்கத்தின் தலைவரும், போட்டியின் நடுவருமான கெயோஷி, ரத்னபாலா, ஷிகான் அசோக்குமார், இணை செயலாளர் மு. சீனிவாசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

இந்தப் போட்டியில் தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 1100 பேர் பங்கேற்றனர்.

இந்தப் போட்டிகளை, தமிழக நிதி மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். வயது மற்றும் எடை அடிப்படையில், ஜூனியர், கேடட், சீனியர் பிரிவுகளில் தனிநபர் கத்தா, நேரடி சண்டை, குழு கத்தா போட்டிகள் என நடைபெற்றன.

இதில் கோஜூ-ரியு, சோரின்-ரியு, ஷிட்டோ-ரியு, வாடோ-ரியு, சோடக்கான், கோஜூ-காய் உள்ளிட்ட கலைகளைக் கற்றவர்கள் பங்கேற்ற 95 விதமான போட்டிகள் நடைபெற்றன.

இதில் கோஜூ-காய் சர்வதேச கராத்தே பள்ளி தேசியத்தலைவர் மு.சீனிவாசன் தலைமையில், அப்பள்ளியைச் சேர்ந்த சென்னை மற்றும் திருச்சி மாணவ, மாணவிகள் 25 பேர் பங்கேற்றனர்.

அதில், கயல்விழி, ஹாசினி, ஹர்சிதா, ஆப்ரின், ஆம்னா, அனுக்கிரஹா, யாழினி, ஜெயலட்சுமி, சோனியாமேரி, ஸ்வேதா, ஐஸ்வர்யா, பிரியங்கா, ஆதித்யஅனில், தஸ்னீம், இலக்கியா, அக்ஷயா, ஆர்யாஸ்பெவின், முகேஷ்தேஜா, சதன், சீனிவாசன் ஆகிய 20 பேர் பல்வேறு பிரிவு போட்டிகளில் மொத்தம் 21 தங்கம், 12 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 49 பதக்கங்களை பெற்று தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு தகுதி பெற்றனர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, இண்டர்நேஷனல் கராத்தே டோ கோஜூ காய் சங்கத்தின் தலைவரும், திருச்சி மாவட்ட செயலாளருமான கெயோஷி மூர்த்தி பாராட்டுகளைத் தெரிவித்தார்.

வெற்றி பெற்ற அனைவரும் 2018 ஜனவரியில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், அகில இந்திய கராத்தே கூட்டமைப்பு (ஏ.ஐ.கே.எப்) சார்பில் நடைபெற இருக்கும் 30-வது தேசிய கராத்தே போட்டிகள் பங்கேற்க தகுதிப் பெற்றனர் என்பது கொசுறு தகவல்.

tags
click me!