இந்தியா மண்ணை கவ்வியதற்கு இந்த 3 பேர் தான் முக்கிய காரணம்!!

By karthikeyan VFirst Published Sep 12, 2018, 3:18 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததற்கு ஒரு சில வீரர்கள் சரியாக ஆடாததே முக்கிய காரணம். அவர்கள் யார் யார் என்பது குறித்து பார்ப்போம். 
 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததற்கு ஒரு சில வீரர்கள் சரியாக ஆடாததே முக்கிய காரணம். அவர்கள் யார் யார் என்பது குறித்து பார்ப்போம். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-4 என இழந்தது. இந்த தொடரின் முதல் மற்றும் நான்காவது போட்டிகளில் இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது. இரண்டாவது போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றது. கடைசி போட்டியில் 464 ரன்கள் என்ற இலக்கை ராகுல்-பண்ட்டின் உதவியுடன் விரட்டிய இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. 

இந்த தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாகவே அமைந்தது. குறிப்பாக வேகப்பந்து வீச்சு. பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி ஆகியோர் சிறப்பாகவே பந்துவீசினர். அஷ்வின் முதல் போட்டியில் மட்டுமே சிறப்பாக வீசினார். மற்ற போட்டிகளில் சோபிக்கவில்லை. எனினும் அவர் நான்காவது போட்டியில் முழு உடற்தகுதி இல்லாமலேயே களமிறக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

பேட்டிங்கை பொறுத்தவரை விராட் கோலி, கடைசி போட்டியின் கடைசி இன்னிங்ஸை தவிர மற்ற அனைத்து இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக ஆடினார். 10 இன்னிங்ஸ்களில் ஆடி, 592 ரன்களை குவித்துள்ள கோலி தான், இந்த தொடரின் அதிகபட்ச ரன்களை குவித்தவர். புஜாராவும் ஓரளவிற்கு பங்களிப்பு செய்தார். தொடக்க வீரர் முரளி விஜய், முதலிரண்டு போட்டிகளுக்கு பிறகு அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதனால் ஒட்டுமொத்தமான தொடரின் தோல்விக்கு அவரும் காரணம் என குறிப்பிட முடியாது. 

அனைத்து போட்டிகளிலும் ஆட வாய்ப்பு கிடைத்த ராகுல், கடைசி போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸை ஆடுவதற்கு முன்னதாக, அவர் ஆடிய 9 இன்னிங்ஸ்களில் சேர்த்தே 150 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஆனால் கடைசி போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இக்கட்டான நிலையிலிருந்து அணியை மீட்டெடுத்து மானத்தை காத்ததோடு அதிரடியாக ஆடி அபார சதம் ஒன்றையும் விளாசினார். மேலும் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு அதிகமான கேட்ச்களை பிடித்து சாதனையும் படைத்தார். 

தினேஷ் கார்த்திக் முதல் இரண்டு போட்டிகளுக்கு பிறகு ஆடவில்லை. ரிஷப் பண்ட், கடைசி போட்டியில் அடித்த சதம், விக்கெட் கீப்பிங் என அவரால் முடிந்த பங்களிப்பை கொடுத்தார். 

இவர்கள் தவிர எஞ்சியிருப்பது ஷிகர் தவன், ரஹானே, ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரும் தான். இவர்கள் மூவருமே மொத்தமாக சொதப்பிவிட்டனர். 

ரஹானே:

மூன்றாவது டெஸ்டில் அடித்த 81 ரன்கள் மற்றும் மற்றொரு அரைசதம் ஆகியவற்றை தவிர ரஹானே வேறு எதுவுமே செய்யவில்லை. சீனியர் வீரரான அவரிடமிருந்து அணி நிறைய எதிர்பார்த்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை ரஹானே பூர்த்தி செய்யவில்லை. களத்தில் நிலைத்து நின்ற சில சமயங்களில், அதை பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸை ஆடாமல் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார் ரஹானே. மேலும் ஃபீல்டிங்கிலும் சொதப்பிய ரஹானே, கணிசமான கேட்ச்களையும் தவறவிட்டார். அந்த கேட்ச்களுக்கும் சேர்த்து இந்திய அணி மிகப்பெரிய விலை கொடுக்க நேர்ந்தது. 

ஷிகர் தவான்:

அடுத்தது, ஷிகர் தவான். இரண்டாவது போட்டியை தவிர மற்ற 4 போட்டிகளிலும் ஆடிய தவான், 8 இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே 162 ரன்கள் மட்டுமே எடுத்தார். வெளிநாடுகளில் தொடர்ந்து சொதப்பிவந்த தவான், இந்த தொடரிலும் படுமோசமாக சொதப்பினார். கடைசி போட்டியில் முதல் இன்னிங்ஸில் 3 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 1 ரன் மட்டுமே எடுத்தார். 

ஹர்திக் பாண்டியா:

ஆரம்பத்தில் கபில் தேவுடன் ஒப்பிடப்பட்ட பாண்டியா, காலப்போக்கில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். முதல் நான்கு போட்டிகளில் ஆடிய பாண்டியா,  மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மட்டுமே நன்றாக ஆடினார். மூன்றாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்தார். அதைத்தவிர வேறு எந்த போட்டியிலும் சரியாக ஆடவில்லை. பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சொதப்பினார். இங்கிலாந்து தொடரில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட பாண்டியா, ஒன்றுமே செய்யவில்லை. அதனால்தான் கடைசி போட்டியில் அணியில் ஆடும் வாய்ப்பை இழந்தார். 

 

click me!