#ENGvsIND என்னை பொறுத்தமட்டில் அவருதான் ஆட்டநாயகன்..! ஜாகீர் கான் தடாலடி

By karthikeyan VFirst Published Aug 10, 2021, 3:59 PM IST
Highlights

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருது குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஜாகீர் கான்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்கள் அடிக்க, இந்திய அணி 278 ரன்கள் அடித்தது. 

95 ரன்கள்  பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, 303 ரன்கள் அடித்தது. இதையடுத்து 209 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, 4ம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் அடித்திருந்தது. கடைசி நாளில் இந்திய அணியின் வெற்றிக்கு 157 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் இந்திய அணி வெற்றிக்கு அருகில் இருந்தது. ஆனால் கடைசி நாளில் மழை பெய்ததால் ஆட்டம் டிரா என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. 

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக முதல் இன்னிங்ஸில் 64 ரன்களும், 2வது இன்னிங்ஸில் சதமும்(109) அடித்த ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் மற்றும் 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட் என மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், பேட்டிங்கிலும்(28 ரன்கள்) பங்களிப்பு செய்த பும்ராவுக்குத்தான் ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது இந்திய முன்னாள் வீரர்கள் பலரது கருத்தாக உள்ளது.

ஆகாஷ் சோப்ரா இந்த கருத்தை ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், ஜாகீர் கானும் பும்ராவுக்குத்தான் ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கிரிக்பஸ்-ல் பேசிய ஜாகீர் கான், ஒரேயொரு ஆட்டநாயகன் தான் என்றால், என்னை பொறுத்தவரை அது ஜஸ்ப்ரித் பும்ரா தான். நான் இவ்வாறு கூற தெளிவான காரணம் இருக்கிறது. அந்த டெஸ்ட் போட்டியின் போக்கை முதல் ஓவரிலிருந்தே செட் செய்தவர் பும்ரா தான். ரூட் நல்ல வீரர் தான். அருமையாக ஆடினார். ஆனாலும் அந்த அணி அந்த போட்டியில் ஜெயிக்க வேண்டிய நிலையிலோ அல்லது டிரா செய்யும் சூழலிலோ இல்லை. இந்தியா தான் முழுக்க முழுக்க வெற்றிக்கு அருகில் இருந்தது. அதற்கு காரணம் பும்ரா. அவர் தான் மேட்ச் வின்னர். 

இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர்களுடன் ஒப்பிடுகையில் பும்ரா மிகச்சிறப்பாக வீசினார். ஸ்விங்கிங் யார்க்கர்களை மிரட்டலாக வீசினார். எனவே என்னை பொறுத்தமட்டில் ஆட்டநாயகனாக பும்ரா தான் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பேன் என்று ஜாகீர் கான் தெரிவித்தார்.
 

click me!