ஓய்வை அறிவித்த மூன்றே வாரத்தில் யுவராஜ் சிங் அதிரடி.. ரசிகர்கள் உற்சாகம்

Published : Jun 19, 2019, 05:09 PM IST
ஓய்வை அறிவித்த மூன்றே வாரத்தில் யுவராஜ் சிங் அதிரடி.. ரசிகர்கள் உற்சாகம்

சுருக்கம்

கடந்த 10ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த யுவராஜ் சிங், ஓய்வு அறிவித்த மூன்றே வாரங்களில் அவர் எடுத்துள்ள அதிரடி முடிவு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 

இந்திய அணியில் 2000ம் ஆண்டில் அறிமுகமான யுவராஜ் சிங், 2003, 2007, 2011 ஆகிய 3 ஒருநாள் உலக கோப்பை தொடர்களில் ஆடியுள்ளார். 2011 உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். அந்த உலக கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதையும் யுவராஜ் தான் வென்றார். 2011 உலக கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே யுவராஜின் பங்களிப்பு அளப்பரியது. 

அதேபோல ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி அரிய சாதனையை நிகழ்த்திய யுவராஜ் சிங், 2007ல் டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றபோதும் முக்கிய பங்காற்றினார். இந்திய அணிக்காக மிகப்பெரிய பங்காற்றியுள்ள யுவராஜ் சிங், கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக இந்திய அணியில் ஆடவில்லை. 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் யுவராஜ் ஆடியதுதான் கடைசி.  அதன்பிறகு நடந்த யோ யோ டெஸ்டில் தோல்வி அடைந்ததால், ஓரங்கட்டப்பட்ட யுவராஜ், அதன்பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை. 

கடந்த இரண்டு சீசன்களாக ஐபிஎல்லிலும் பெரியளவில் ஆடவில்லை. 2018 ஐபிஎல்லில் அவரை ஏலத்தில் எடுத்த பஞ்சாப் அணி, 2019 சீசனில் கழட்டிவிட்டது. இதையடுத்து 2019 சீசனுக்கான ஏலத்தில் இரண்டாம் கட்ட ஏலத்தின் போது அவரது அடிப்படை விலையான ஒரு கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. ஆரம்பத்தில் சில போட்டிகளில் வாய்ப்பு கொடுத்தது. அதன்பின்னர் யுவராஜ் சிங்கை பென்ச்சில் உட்கார வைத்தது.

இந்நிலையில், கடந்த 10ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். ஐபிஎல்லில் இருந்தும் ஓய்வு பெற்றார் யுவராஜ் சிங். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த யுவராஜ் சிங், வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் ஆடுவது குறித்த தனது ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார். 

யுவராஜ் சிங் ஓய்வு அறிவித்து 3 வாரங்கள் ஆன நிலையில், வெளிநாட்டு லீக் தொடர்களில் ஆட பிசிசிஐ-யிடம் இருந்து தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளார். அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் அவருக்கு தடையில்லா சான்று கிடைப்பதில் சிக்கல் இருக்காது என தெரிகிறது. யுவராஜ் சிங் ஓய்வுபெற்றதால் சோகத்தில் இருந்த அவரது ரசிகர்கள், வெளிநாட்டு லீக் தொடரில் யுவராஜ் ஆடுவதை பார்க்கலாம் என்ற உற்சாகத்தில் உள்ளனர். 

இந்தியாவில் ஐபிஎல் நடத்தப்படுவதை போலவே, கனடா பிரீமியர் லீக், பிக்பேஷ் லீக், ஆஃப்கானிஸ்தான் பிரீமியர் லீக், கரீபியன் பிரீமியர் லீக் என பல்வேறு நாடுகளில் டி20 லீக் தொடர்கள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!