தற்போதைய இந்திய அணி கலாச்சாரத்தை கழுவி ஊற்றிய யுவராஜ் சிங்.. மறு பேச்சு பேசாமல் மௌனமா கேட்ட ரோஹித்

By karthikeyan VFirst Published Apr 9, 2020, 8:29 PM IST
Highlights

ரோஹித் சர்மா - யுவராஜ் சிங் இடையேயான இன்ஸ்டாகிராம் லைவ் உரையாடலில் தற்போதைய இந்திய அணியின் கலாச்சாரத்தை ரோஹித் சர்மாவிடம் கழுவி ஊற்றினார் யுவராஜ் சிங்.
 

கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், முன்னாள், இந்நாள் வீரர்கள் பலரும் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவது, ஆல்டைம் பெஸ்ட் அணிகளை தேர்வு செய்வது என ஏதாவது ஒரு வகையில், ரசிகர்களை எண்டர்டெய்ன் செய்து வருகின்றனர்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, கெவின் பீட்டர்சனுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ காலில் உரையாடினார். அதேபோல தற்போதைய இந்திய அணியின் சீனியர் வீரரும் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் துணை கேப்டனுமான ரோஹித் சர்மா, முன்னாள் வீரர் யுவராஜ் சிங்குடன் உரையாடினார்.

அப்போது, நீங்கள் ஆடிய காலத்தில் இருந்த இந்திய அணிக்கும் தற்போதைய இந்திய அணிக்கும் என்ன வித்தியாசத்தை பார்க்கிறீர்கள் என்று ரோஹித் சர்மா, யுவராஜ் சிங்கிடம் கேட்டார்.

அதற்கு எந்தவிதமான ஒளிவுமறைவுமின்றி வெளிப்படையாக பதிலளித்த யுவராஜ் சிங், நான் அணிக்குள் வந்தபோதும் சரி.. நீ அணிக்குள் வந்தபோதும் சரி.. நம் மூத்த வீரர்கள் ஒழுக்கமாகவும் கட்டுக்கோப்புடனும், இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக நடந்துகொண்டனர். அப்போதெல்லாம் சமூக ஊடகங்கள் இல்லை. அதனால் கவனச்சிதறல்களும் இல்லை.

மூத்த வீரர்கள் பொதுவெளியில் எப்படி நடந்துகொள்கிறார்கள், ஊடகங்களிடம் எப்படி பேசுகிறார்கள் என்பதை பார்த்து, இளம் வீரர்கள் ஒழுக்க நெறிகளை கற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால் இப்போதெல்லாம் அப்படியில்லை என்பதைத்தான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

இப்போதைய இந்திய அணியில் நீயும் கோலியும் மட்டும் தான் சீனியர் வீரர்கள். இந்திய அணிக்காக ஆட வந்துவிட்டால், ஆளுமை குறித்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மூத்த வீரர்களுக்கு மரியாதை என்ற விஷயத்தை, இப்போதைய இந்திய அணியில் ஒரு சில இளம் வீரர்களிடம் மட்டும்தான் பார்க்க முடிகிறது. சீனியர் வீரர்களுக்கும் இளம் வீரர்களுக்கும் இடையே ஒரு மெல்லிய கோடுதான் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை உள்ளது. அது சரியானதல்ல.

நாங்கள் ஆடிய காலத்தில் பார்ட்டிகளில் கலந்துகொள்வதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஏனெனில் சீனியர் வீரர்கள் நம்மை கடிந்துகொள்வார்களே என்ற பயத்தில் பார்ட்டிகளில் கலந்துகொள்ளவே மாட்டோம். ஆனால் இப்போதெல்லாம் அப்படியில்லை. ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல் இருவரும் பெண்களை பற்றி அசால்ட்டாக பேசியது மாதிரியான சம்பவமெல்லாம் எங்கள் காலத்தில் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று தன் மனதில் பட்டதை மிகவும் ஓபனாக பேசினார் யுவராஜ் சிங்.

யுவராஜ் சிங்கின் கருத்தை எந்தவித குறுக்கீடோ மறுப்போ இல்லாமல் கேட்டுக்கொண்டார் ரோஹித் சர்மா. ஆனால் யுவராஜ் சிங் பேசி முடித்தவுடன், நான் அணிக்கு வரும்போது, நான், பியூஷ் சாவ்லா மற்றும் ரெய்னா ஆகிய நாங்கள் மூவர் மட்டும்தான் இளம் வீரர்கள். மற்றவர்கள் அனைவருமே சீனியர்கள். இப்போது சூழல் கொஞ்சம் மாறியுள்ளது. நான் இளம் வீரர்களுடன் பேசுகிறேன் என்று ரோஹித் சர்மா தெரிவித்தார்.

click me!