
ஐபிஎல் 13வது சீசனில்(2020 ஐபிஎல்) ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய இளம் பேட்ஸ்மேன்கள் ஐபிஎல்லில் அறிமுகமாகினர். இவர்களில் ருதுராஜ் கெய்க்வாட், படிக்கல் ஆகியோர் சிறப்பாக ஆடி தங்களது திறமையை நிரூபித்ததுடன், அவரவர் ஆடும் அணியில் நிரந்தர இடத்தையும் பிடித்துவிட்டனர்.
ஆனால் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு மட்டும் கிளிக் ஆகவேயில்லை. கடந்த சீசனில் அவருக்கு கிடைத்த ஒருசில வாய்ப்புகளை அவர் பயன்படுத்திக்கொள்ளாததால் அணியில் இடத்தை இழந்தார். இந்த சீசனிலும் இதுவரை சரியாக ஆடாமல் இருந்துவந்தார்.
தனது திறமையை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு, சிஎஸ்கே - ராஜஸ்தான் இடையேயான இன்றைய போட்டியில் சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அடித்த அதிரடி சதம் பெரும் உத்வேகமாக அமைந்திருக்கிறது. சிஎஸ்கே நிர்ணயித்த 190 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவரும் ராஜஸ்தான் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி மிரட்டினார்.
சிஎஸ்கே பவுலர்கள் வீசிய பந்துகள் அனைத்தையுமே விளாசி தள்ளிய ஜெய்ஸ்வால், சிஎஸ்கே அணியை மிரட்டிவிட்டார். வெறும் 19 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால், 21 பந்தில் 50 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அவரும் எவின் லூயிஸும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுக்க, பவர்ப்ளேயிலேயே 81 ரன்களை குவித்தது ராஜஸ்தான் அணி.
ஜெய்ஸ்வால் மற்றும் லூயிஸ் ஆகிய இருவருமே ஆட்டமிழக்க, சாம்சனும் ஷிவம் துபேவும் இணைந்து ஆடிவருகின்றனர்.