
இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றதால் 2-2 என தொடர் சமனில் இருந்தது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று பார்படாஸில் நடந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில், பிரண்டன் (34), கைல் மேயர்ஸ் (31), பூரன் (21), பொல்லார்டு (41), ரோவ்மன் பவல் (35) ஆகியோரின் பங்களிப்பால் 20 ஓவரில் 179 ரன்கள் அடித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. ரோவ்மன் பவல் அதிரடியாக ஆடி 17 பந்தில் 35 ரன்கள் அடித்து பாசிட்டிவாக இன்னிங்ஸை முடித்து கொடுத்தார்.
இதையடுத்து 180 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியாக ஆடி 55 ரன்கள் அடித்தார். சாம் பில்லிங்ஸ் 41 ரன்கள் அடித்தார். ஆனால் மற்ற வீரர்கள் யாருமே சரியாக பேட்டிங் ஆடவில்லை. ஜேசன் ஹோல்டர் மற்றும் அகீல் ஹுசைன் ஆகிய இருவரின் பவுலிங்கில் தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 19.5 ஓவரில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 5 விக்கெட்டுகளையும், அகீல் ஹுசைன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, 3-2 என தொடரை வென்றது. கடைசி டி20 போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய விருதுகளையும் வென்றார் ஜேசன் ஹோல்டர்.