ஷாய் ஹோப் அபார சதம்.. ஆஃப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்

By karthikeyan VFirst Published Nov 12, 2019, 10:04 AM IST
Highlights

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஃப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து 3-0 என தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி. 

ஆஃப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் லக்னோவில் நடந்துவருகிறது. இரு அணிகளும் 3 ஒருநாள், 3 டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஆடிவருகின்றன. 

முதலில் ஒருநாள் தொடர் நடந்தது. முதல் இரண்டு போட்டிகளிலும் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆஃப்கான், முகமது நபி மற்றும் தொடக்க வீரர் ஹஸ்ரதுல்லா சேசாய் ஆகிய மூவரும் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்ததால் அந்த அணி 50 ஓவரில் 249 ரன்களை அடித்தது. 

தொடக்க வீரர் இப்ராஹிம் ஜட்ரான்(2), ரஹ்மத் ஷா(10), இக்ரம் அலி கில்(9) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஒருமுனையில் நிலைத்து நின்ற மற்றொரு தொடக்க வீரரான ஹஸ்ரதுல்லா சேசாய் அரைசதம் அடித்து 50 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பொறுப்பை தனது தோள்களில் சுமந்து சிறப்பாக ஆடிய அஸ்கர் ஆஃப்கான் அரைசதம் அடித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய நஜிபுல்லா ஜட்ரான் 30 ரன்களில ஆட்டமிழக்க, அதன்பின்னர் அஸ்கர் ஆஃப்கானுடன் ஜோடி சேர்ந்த முகமது நபி பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் அரைசதமும் அடித்தார். 

அஸ்கர் ஆஃப்கான் 86 ரன்கள் அடித்து 49வது ஓவரில் ஆட்டமிழந்தார். முகமது நபி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் அடித்திருந்தார். இன்னிங்ஸின் கடைசி பந்தில் ரஷீத் கான் ஆட்டமிழக்க, 249 ரன்கள் அடித்து 250 ரன்களை வெஸ்ட் இண்டீஸுக்கு இலக்காக நிர்ணயித்தது ஆஃப்கானிஸ்தான். 

250 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் லீவிஸ் ஒரு ரன்னிலும் அதன்பின்னர் களத்திற்கு வந்த ஹெட்மயர் ரன்னே எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 4 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது வெஸ்ட் இண்டீஸ். 

அதன்பின்னர் கண்டிப்பாக பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தாக வேண்டிய கட்டாயத்தில் தொடக்க வீரர் ஷாய் ஹோப்புடன் பிரண்டன் கிங் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடி ஹோப்புக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். பிரண்டன் கிங் 39 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த நிகோலஸ் பூரான் 21 ரன்களிலும் பொல்லார்டு 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய தொடக்க வீரர் ஷாய் ஹோப், வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். 

அவருடன் இணைந்து சேஸும் சிறப்பாக ஆடினார். பொறுப்புடன் ஆடிய ஹோப் சதமடித்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றி பெற செய்தார். சேஸ் 42 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 49வது ஓவரிலேயே இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, 3-0 என ஆஃப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது. 
 

click me!