#WIvsSA முதல் டெஸ்ட்: படுமட்டமா வெறும் 97 ரன்களுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்..! தென்னாப்பிரிக்கா ஆதிக்கம்

By karthikeyan VFirst Published Jun 11, 2021, 2:39 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வெறும் 97 ரன்களுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ் அணி.
 

தென்னாப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

தொடக்கத்தில் அன்ரி்க் நோர்க்யாவின் பந்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி, பின்னர் லுங்கி இங்கிடியின் பந்தில் விக்கெட்டுகளை இழந்து 97 ரன்களுக்கே ஆல் அவுட்டானது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷாய் ஹோப் மற்றும் க்ரைக் பிராத்வெயிட் ஆகிய இருவரையும் தலா 15 ரன்களுக்கு நோர்க்யா போல்டாக்கி அனுப்ப, பானர் 10 ரன்களில் ரபாடாவின் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர், கைல் மேயர்ஸ் மற்றும் பிளாக்வுட் ஆகிய இருவரையும் தலா ஒரு ரன்னில் நோர்க்யா வீழ்த்த, எஞ்சிய 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி 97 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸை சுருட்டியதில் முக்கிய பங்கு வகித்தார் லுங்கி இங்கிடி.

தென்னாப்பிரிக்க அணி சார்பில் இங்கிடி அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்த, நோர்க்யா 4 விக்கெட்டுகளையும் ரபாடா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் நாள் ஆட்டத்திலேயே முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான எல்கர் டக் அவுட்டானார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான மார்க்ரம் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். கீகன் பீட்டர்சன் 19 ரன்னில் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த மார்க்ரம் 60 ரன்னில் அவுட்டானார். கைல் வெரெய்ன் 6 ரன்னில் ஆட்டமிழக்க, வாண்டெர் டசனும் குயிண்டன் டி காக்கும் ஆடிவருகின்றனர்.

முதல் நாள் ஆட்ட முடிவில் தென்னாப்பிரிக்க அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் அடித்துள்ளது. வாண்டெர்டசன் 34 ரன்களுடனும் டி காக் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
 

click me!