ஆல்டைம் சர்வதேச ஒருநாள் அணி! நீண்ட அனுபவம் வாய்ந்த இந்திய வீரரின் தேர்வு! பாண்டிங்கே சப்ஸ்டிடியூட்னா பாருங்க

By karthikeyan VFirst Published Apr 4, 2020, 5:46 PM IST
Highlights

இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் வீரரும் ரஞ்சி தொடரில் மிக நீண்ட அனுபவம் கொண்ட வீரருமான வாசிம் ஜாஃபர், சர்வதேச ஆல்டைம் ஒருநாள் கிரிக்கெட் அணியை தேர்வு செய்துள்ளார்.
 

கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும், வீடுகளில் இருந்துகொண்டே பலவிதமான செயல்களை செய்துவருகின்றனர்.

சிலர் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுகின்றனர். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கின்றனர். சில முன்னாள் இந்நாள் வீரர்கள் சமூக வலைதளங்களில் வீடியோ காலில் பேசி பொழுதுபோக்குவதுடன், போட்டிகள் இல்லாமல் விளையாட்டு செய்தியே இல்லாமல் இருக்கும் இந்த சூழலில் செய்தி கொடுக்கின்றனர்.

அந்த வகையில், இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாஃபர், ஆல்டைம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணியை தேர்வு செய்துள்ளார்.

வாசிம் ஜாஃபர் தேர்வு செய்த ஆல்டைம் ஒருநாள் அணியின்  தொடக்க வீரர்கள் இருவருமே இந்தியர்கள் தான். சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா ஆகிய இருவரையும் ஆல்டைம் சிறந்த ஒருநாள் அணியின் தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ளார்.

மூன்றாம் வரிசை வீரராக வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட் பேட்ஸ்மேன் விவியன் ரிச்சர்ட்ஸையும் நான்காம் வரிசைக்கு இந்திய அணியின் கேப்டனும் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரருமான விராட் கோலியையும் தேர்வு செய்துள்ளார்.

ஐந்தாம் வரிசை வீரராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸையும் ஆல்ரவுண்டராக இங்கிலாந்து ஆல்ரவுண்டரும் 2019 உலக கோப்பை நாயகனுமான பென் ஸ்டோக்ஸை தேர்வு செய்துள்ளார். விக்கெட் கீப்பராக தோனியை தேர்வு செய்துள்ள வாசிம் ஜாஃபர், அவரைத்தான் இந்த அணியின் கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார்.

ஃபாஸ்ட் பவுலர்களாக வாசிம் அக்ரம் , க்ளென் மெக்ராத் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் ஜோயல் கார்னர் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ள வாசிம் ஜாஃபர், ஸ்பின்னராக ஷேன் வார்ன் அல்லது சாக்லைன் முஷ்டாக் ஆகிய இருவரில் ஒருவர் என்று தெரிவித்துள்ளார். 12வது வீரராக ஆஸ்திரேலிய அணிக்கு 2003 மற்றும் 2007ம் ஆண்டுகளில் உலக கோப்பையை வென்று கொடுத்த ரிக்கி பாண்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரையும் 3 மற்றும் 4ம் வரிசைகளில் எடுத்ததால், பாண்டிங்கை ஆடும் லெவனில் எடுக்க முடியவில்லை. அவர் சிறந்த கேப்டன்சி மெட்டீரியல். ஆனால் தோனியை கேப்டனாக தேர்வு செய்ததால் பாண்டிங்கை எடுக்க வேண்டியதன் அவசியமில்லாமல் போய்விட்டது. 

வாசிம் ஜாஃபர் தேர்வு செய்த சர்வதேச ஆல்டைம் ஒருநாள் கிரிக்கெட் அணி:

சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, விவியன் ரிச்சர்ட்ஸ், விராட் கோலி, டிவில்லியர்ஸ், பென் ஸ்டோக்ஸ், தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), வாசிம் அக்ரம், ஷேன் வார்ன்/சாக்லைன் முஷ்டாக், ஜோயல் கார்னர், க்ளென் மெக்ராத்.

12வது வீரர்: ரிக்கி பாண்டிங்.

சச்சின், ரோஹித், கோலி, தோனி என நான்கு பேட்ஸ்மேன்களை தேர்வு செய்த வாசிம் ஜாஃபர், ஆல்டைம் அணியில் ஒரு இந்திய பவுலரைக்கூட தேர்வு செய்யவில்லை. 

வாசிம் ஜாஃபர் இந்திய அணிக்காக பெரிதாக ஆடவில்லை. ஆனால் ரஞ்சி தொடரில் நீண்ட அனுபவம் கொண்டவர். 150 ரஞ்சி போட்டிகளில் ஆடிய முதல் வீரர் வாசிம் ஜாஃபர் தான். ரஞ்சியில் 12 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். ரஞ்சி தொடரில் 2 முறை 1000 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே வீரர். ரஞ்சியில் நீண்ட அனுபவம் கொண்ட வாசிம் ஜாஃபர், அண்மையில் முடிந்த ரஞ்சி தொடருடன் ஓய்வு பெற்றுவிட்டார்.
 

click me!